திருப்பூர்: தமிழக அரசின் உத்தரவு காரணமாக, கிருமிநாசினி தெளிப்பு நடைபாதை அனைத்தும் மூடப்பட்டன.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், காய்கறி சந்தை, மளிகை, மெடிக்கல் போன்றவற்றில் மக்கள் கூட்டம் குறைந்தபாடில்லை. வைரஸ் பரவலை தடுக்க, திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில், கிருமிநாசினி தெளிப்பு நடைபாதை அமைக்கப்பட்டது,இதை பார்த்து, தமிழகத்தின் பல இடங்களிலும், கிருமிநாசினி தெளிப்பு பாதை அமைக்கப்பட்டது.
நேற்று முன்தினம் சென்னையில் மருத்துவர்கள் குழுவுடன் முதல்வர் ஆலோசித்தார். அதில், தெளிக்கப்படும் கிருமிநாசினி மிகவும் குறைவான அளவிலேயே பயன்படுத்தப்படுவதால் அது கிருமியை அழிக்காது. அதிகமாக பயன்படுத்தினால் தோல் எரிச்சல், கண் எரிச்சல் போன்ற ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.
இதனால், தமிழக அரசு உத்தரவின்படி, திருப்பூர், தாராபுரம் உள்ளிட்ட பகுதியில் அமைக்கப்பட்ட கிருமிநாசினி தெளிப்பு நடைபாதை நேற்று மூடப்பட்டது. மற்ற மாவட்டங்களிலும், மூடப்படுகிறது.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் விசாரித்த போது, ‘கிருமிநாசினி தெளிப்பு நடைபாதையில், சோடியம், கால்சியம் ஹைபோ குளோரைட் அல்லது ஹைட்ரஜன் பெராக்ஸைடு ஆகிய கரைசலை பயன்படுத்துகின்றனர். இதனால், உடல் ரீதியான ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, கைகளை ‘சானிடைசர்’, சோப்பு கொண்டு கழுவ அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றனர்.
malaimalar