பஞ்சாப் மாநிலத்தில் சப்-இன்ஸ்பெக்டர் கையை துண்டித்த சீக்கிய குழு

சப்-இன்ஸ்பெக்டர் கையை துண்டித்த சீக்கிய குழு

பஞ்சாப் மாநிலத்தில், ஊரடங்கின்போது வெளியே வந்த சீக்கிய பிரிவினரிடம் சிறப்பு அனுமதி சீட்டை கேட்டதால், சப்-இன்ஸ்பெக்டர் கையை துண்டித்தனர்.

சண்டிகர்: கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் காய்கறி வாங்க வெளியே செல்வதற்கு சிறப்பு அனுமதி சீட்டு பெறும் விதிமுறை உள்ளது.

இந்நிலையில், பாட்டியாலா மாவட்டம் சனார் நகரில் உள்ள மொத்த விலை காய்கறி மார்க்கெட்டுக்கு சீக்கிய மதத்தில் ‘நிஹாங்‘ என்ற பிரிவை சேர்ந்த 5 பேர் ஒரு வாகனத்தில் வந்தனர். இந்த பிரிவினர், எப்போதும் நீண்ட வாளுடனும், தளர்வான நீலநில அங்கியுடனும் காட்சி அளிப்பார்கள்.

அப்போது, காய்கறி மார்க்கெட் நிர்வாக குழுவினர், வாகனத்தை நிறுத்த சொன்னார்கள். அதற்கு அந்த சீக்கியர்கள், தங்கள் வாகனத்தை காய்கறி மார்க்கெட் கதவு மீதும், போலீஸ் தடுப்புகள் மீதும் மோதினர்.

அதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஹர்ஜீத் சிங் மற்றும் போலீசார், அந்த சீக்கியர்களிடம் சிறப்பு அனுமதி சீட்டை காட்டுமாறு கேட்டனர்.

இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள், தங்கள் வாளால் ஹர்ஜீத் சிங்கின் கையை துண்டித்தனர். அவர்களின் தாக்குதலில் மேலும் 2 போலீசார் காயமடைந்தனர்.

தாக்குதலை தொடர்ந்து, 5 சீக்கியர்களும், அருகில் பல்பேரா கிராமத்தில் உள்ள குருத்வாராவில் தஞ்சம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்து வெளியேற்றி கைது செய்ய சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மந்தீப்சிங் சித்து தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

அந்த தனிப்படையினர், குருத்வாராவை அடைந்தனர். அதை சுற்றிலும் பொதுமக்கள் நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர், குருத்வாராவில் பதுங்கி இருந்த 5 சீக்கியர்களும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த ஒரு பெண் உள்பட 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே, கை துண்டிக்கப்பட்ட உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஹர்ஜீத் சிங், பாட்டியாலாவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பிறகு அங்கிருந்து தலைநகர் சண்டிகாரில் உள்ள பிஜிமர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவருக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் உடல்நிலை சீராக இருப்பதாக போலீஸ் டி.ஜி.பி. திங்கர் குப்தா தெரிவித்தார்.

இந்நிலையில், சீக்கிய பிரிவினரின் செயலுக்கு மத்திய நகர்ப்புற விவகாரத்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “போலீசார் மீதான இந்த மனிதத்தன்மையற்ற தாக்குதலை அனைவரும் கண்டிக்க வேண்டும். இத்தகைய கிரிமினல்கள் விரைவில் நீதியின் முன்பு நிறுத்தப்பட வேண்டும். அவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும். சப்-இன்ஸ்பெக்டர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.

malaimalar