ஊரடங்கு மன அழுத்தம் குறைய எஸ்.பி.பாலசுப்ரமணியம், கே.ஜே.ஜேசுதாஸ் ஆன்லைன் மூலம் இசை நிகழ்ச்சி

கொரோனா தடுப்பு பணிகளில் டாக்டர்கள், செவிலியர்கள், போலீசார், மருத்துவ ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் இரவு பகலாக உழைத்து வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கபட்டு வருகிறது. அதையும் மீறி சிலர் வெளியே சுற்றுவதால் அவர்கள் மூலம் கொரோனா பரவலாம் என்ற அச்சமும் நிலவுகிறது. நடிகர்-நடிகைகள் கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு மக்களை வீட்டில் இருக்கும்படி வற்புறுத்தி வருகிறார்கள்.

கொரோனா தடுப்பு பணிகளில் டாக்டர்கள், செவிலியர்கள், போலீசார், மருத்துவ ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் இரவு பகலாக உழைத்து வருகின்றனர். களத்தில் பணியாற்றும் இவர்களுக்காகவும் மக்களின் மன அழுத்தம் குறைக்கவும் பாடகர்கள் வீட்டில் இருந்தே பாடும் ‘சங்கீத கேது’ என்ற ஆன்லைன் இசை நிகழ்ச்சியை தொடங்கி உள்ளனர். இதனை இந்திய பாடகர்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

தற்போதையை சூழ்நிலையில் நாட்டில் உள்ள முன்னணி பாடகர்கள் மூலம் மக்களின் மன அழுத்தம் கவலையை குறைக்க இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்படுவதாக அந்த அமைப்பு அறிவித்து உள்ளது. இதில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கே.ஜே.ஜேசுதாஸ், லதா மங்கேஷ்கர், ஹரிஹரன், ஷங்கர் மகாதேவன், ஆஷா போஸ்லே, உதித் நாராயணன், ஷான், பங்கஜ் உதாஸ், சோனு நிகம் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி பாடகர்கள் கலந்து கொண்டு வீட்டில் இருந்தே பாடுகிறார்கள். இந்த இசை நிகழ்ச்சி 3 நாட்கள் இரவு 9 மணிக்கு நடக்கிறது.

dailythanthi