அரசு அதிகாரிகளுக்கு இன்று பணி துவக்கம்

புதுடில்லி: ஊரடங்கு காரணமாக, மத்திய அரசு அலுவலகங்கள் மிக குறைந்த அதிகாரிகள் மட்டும் ஊழியர்களுடன் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், ‘இன்று முதல், மத்திய அரசின் அனைத்து அலுவலகங்களிலும், இணைச் செயலர், கூடுதல் செயலர், சிறப்பு செயலர் மற்றும் உதவிச் செயலர்கள் மற்றும் செயலர் அந்தஸ்துக்கு மேல் உள்ள அதிகாரிகள் அனைவரும் பணிக்கு வர வேண்டும்’ என, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

அதே நேரத்தில், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பெற்றோர், அதிகாரிகள் அந்தஸ்திலான பணியில் இருந்தால், அவர்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்றலாம் என்றும், அலுவலகங்களில் வெப்ப பரிசோதனை மற்றும் சமூக விலகல் நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும், உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.பார்லிமென்டின், லோக்சபா மற்றும் ராஜ்யசபா செயலகங்கள், இன்று முதல் செயல்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

3.80 லட்சம் பரிசோதனை

மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலர் லவ் அகர்வால் கூறியதாவது:நாடு முழுதும், 3.80 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் மட்டும், 37 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை, உயிரி தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை, ஆயுஷ், சுகாதாரத் துறை உள்ளிட்டவற்றின் அதிகாரிகள், தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

மத்திய அரசு, சில துறைகளுக்கு இன்று முதல் தளர்வு அறிவித்துள்ளது. ஆனால், கொரோனாவால் அதிகம் பேர் பாதித்த பகுதிகளுக்கு இந்த தளர்வு பொருந்தாது. இவ்வாறு, அவர் கூறினார்.

dinamalar