கொரோனா வைரசை வென்ற கட்டுப்பாடுகள் : வழிகாட்டும் ஆக்ரா, பில்வாரா, காசர்கோடு

கொரோனா வைரஸ் தொற்று பரவலின் மையங்களாக இருந்த நிலையில் இருந்து, பாதிப்பில்லாத நகரங்களாக, உத்தர பிரதேசத்தின் ஆக்ரா, ராஜஸ்தானின் பில்வாரா, கேரளாவின் காசர்கோடு மற்றும் பத்தினம்திட்டா மாறியுள்ளன. கடும் கட்டுப்பாடுகள், தொடர் கண்காணிப்பு, தீவிர பரிசோதனை என, ஒருங்கிணைந்த நடவடிக்கையால், நாட்டின் மற்ற பகுதிகளுக்கு இவை, வழிகாட்டியாக மாறியுள்ளன.கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, நாடு முழுதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், சில பகுதிகளில், வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.அதனால், ஊரடங்கு, மே, 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாட்டில், கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்கள், வைரஸ் பாதித்த மாவட்டங்களாக உள்ளன. வைரஸ் பாதிப்பை எதிர்கொள்வதில், ஆக்ரா, பில்வாரா, காசர்கோடு, பத்தினம்திட்டா ஆகியவை, முன்னோடிகளாக இருந்து, மற்ற நகரங்கள் மற்றும் மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளன.

பில்வாரா ராஜஸ்தானின், ஜவுளி நகரான பில்வாரா தான், நாட்டில் முதல் முதலில், அதிக அளவில் வைரஸ் பரவியது. ஆனால், துல்லிய நடவடிக்கையால், தற்போது அங்கு யாருக்கும் பாதிப்பு இல்லை என்ற நிலையை எட்டியுள்ளது.குற்றவியல் நடைமுறை சட்டத்தின், 144வது பிரிவு அமல்படுத்தப்பட்டது. அதன்படி, முதல் கட்டமாக, அத்தியாவசிய சேவைகள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. வைரஸ் கட்டுப்படாததால், இரண்டாம் கட்டமாக, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பில்வாரா நகரின் எல்லைகள் சீலிடப்பட்டன.

ஆங்காங்கே, செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டன. அனைத்து வகை போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.வழக்கமாக, வைரஸ் தொற்று இருந்தால், அதை சுற்றியுள்ள, 3 கி.மீ., துார பகுதியை, கட்டுப்பாட்டில் வைப்பர். அதை சுற்றியுள்ள, 7 கி.மீ., பரப்பை கண்காணிப்பில் வைப்பர்.இங்கு, ஏழு கி.மீ., பரப்பையும், வரைபடமாக தயாரித்து, தொடர்ந்து கண்காணித்தனர்.

இதன் மூலம், வைரஸ் பாதிப்பு உள்ள குறிப்பிட்ட, ஆறு பகுதிகளில், சிறப்பு மருத்துவக் குழுவினர், அனைவரையும் பரிசோதனை செய்தனர். இங்கு இயக்கப்பட்ட, அனைத்து ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனம் உள்ளிட்டவை, தினசரி கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட்டன.பில்வாராவில், மொத்தம், 28 பேருக்கு தொற்று இருந்தது. அதில், 24 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர்.
இரண்டு பேர், கடைசி கட்ட பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர். இருவர் இறந்து விட்டனர். ஆக்ராமொத்தம், 1,200 குழுவினர், வீடு வீடாகச் சென்று, ஒன்பது லட்சத்துக்கும் மேற்பட்டோரை பரிசோதனை செய்தனர். மொபைல் போன், ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா விமானம், சி.சி.டி.வி., கேமரா என, அனைத்து வகை தொழில்நுட்பம் மூலம், இவர்கள் கண்காணிக்கப் பட்டனர்.

அதிக அளவில் மக்கள் கூடுவது தடுக்கப்பட்டதுடன், தேவையான பொருட்கள் வீடு தேடி வந்தன. இந்த நகரில் மக்கள் தனிமைபடுத்தப்பட்டு, வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டனர். மேலும், அவசர உதவி தொலைபேசி வசதியும் உருவாக்கப்பட்டது. தொற்று உள்ள வர்களுக்கு, அவர்களுடைய நிலைமைக்கு ஏற்ப, உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.காசர்கோடுநாட்டில் முதன் முதலில் வைரஸ் தென்பட்டது, கேரளாவில் தான். சீனாவில் இருந்து வந்த மூன்று மாணவர்களுக்கு வைரஸ் தொற்று இருந்தது. சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் வீடு திரும்பினர். வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்தபோது, கேரளாவின் வடக்கே உள்ள காசர்கோடு மாவட்டத்தில், வேகமாக பரவியது. அங்கு, வைரஸ் பாதிப்புள்ள, 168 பேரில், தற்போது, 113 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ஒரு பலி கூட ஏற்படாமல், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் பார்த்து கொண்டன.காசர்கோட்டைச் சேர்ந்தவர்களில் அதிகமானோர், வெளிநாடுகளில் வசிக்கின்றனர். முதன் முதலில், பிப்.,ல், சீனாவில் இருந்து வந்த மாணவர் மூலமும், இரண்டாம் கட்டமாக, மார்ச் மாதத்தில், மேற்காசிய நாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலமாகவும், வைரஸ் பரவியது. கடும் கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது. மாவட்டத்தில், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கிடையாது. ஆனால், இரண்டு வாரங்களுக்குள், நவீன வசதிகளுடன் கூடிய, அரசு மருத்துவமனை துவக்கப்பட்டது.இதன் மூலம், சிகிச்சை பெற்று வந்தவர்களின் எண்ணிக்கை, 136ல் இருந்து, 51 ஆக வேகமாக குறைந்தது.

பத்தினம்திட்டா

கேரளாவின் தென்பகுதியில் உள்ளது பத்தினம்திட்டா. ஐரோப்பிய நாடான இத்தாலியில் இருந்து, மார்ச் மாதம் திரும்பிய, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த, மூன்று பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியானது.அதன்பிறகு, அவர்களுடன் தொடர்புள்ளவர்கள் என, 16 பேருக்கு வைரஸ் பரவியது. இங்கு மூன்று யுக்திகள் கடைபிடிக்கப்பட்டன. பரிசோதனை, எல்லைகள், ‘சீல்’ வைப்பு, தொடர்புகளை கண்டுப்பிடிப்பது என்ற இந்த மூன்று யுக்திகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட பகுதிகள் சீல் வைப்பு, மக்கள் நடமாட்டத்துக்கு தடை, தேவையான பொருட்கள் வினியோகம், தொடர் மருத்துவக் கண்காணிப்பு, துாய்மைப் பணி ஆகியவை மூலம், வைரஸ் பாதிப்பில் இருந்து, இந்த நகரங்கள் மீண்டுள்ளன.

malaimalar