டாக்டர்களை தாக்கினால் 7 ஆண்டு சிறை – அவசர சட்டத்துக்கு மந்திரிசபை ஒப்புதல்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டுவர மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்து உள்ளது. இந்த சட்டத்தின்படி, டாக்டர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

புதுடெல்லி, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

டாக்டர்கள் மீது தாக்குதல்

ஆஸ்பத்திரிகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அமைக்கப்பட்டு, அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர்களும், பிற மருத்துவ பணியாளர்களும் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இப்படி தன்னலமற்ற சேவையில் ஈடுபடும் அவர்கள் தாக்கப்படுவது, அவமதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் சில இடங்களில் நடைபெற்று வருகின்றன. இதனால் டாக்டர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்தது. இதைத்தொடர்ந்து, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி அளித்து இருக்கிறார்.

மந்திரிசபை ஒப்புதல்

இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், தாக்குதல்களில் இருந்து டாக்டர்களை பாதுகாக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வருவது என்று முடிவு செய்யப்பட்டு, அதற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டது.

மந்திரிசபை கூட்டம் முடிந்ததும் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் இதுபற்றி கூறியதாவது:-

அனுமதிக்க மாட்டோம்

பெருந்தொற்று நோயான கொரோனாவில் இருந்து நாட்டை பாதுகாக்க போராடி வரும் டாக்டர்களும், சுகாதார பணியாளர்களும் சில இடங்களில் துரதிருஷ்டவசமாக தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்.

அவர்கள் தாக்கப்படுவதையும், துன்புறுத்தப்படுவதையும் ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. நாகரிக சமுதாயத்தில் இப்படி நடைபெறுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

அவசர சட்டம்

எனவே டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தும் வகையில், 1897-ம் ஆண்டின் பெருந்தொற்று நோய்கள் தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையில், அவசர சட்டம் கொண்டு வர மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள், உதவியாளர்கள், ‘ஆஷா’ பணியாளர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களை, அவர்கள் வசிக்கும் மற்றும் பணிபுரியும் கட்டிடங்களில், வன்முறை தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க இந்த அவசர சட்டம் உதவும்.

தாக்கினால் 7 ஆண்டு சிறை 

  • இந்த அவசர சட்டத்தின்படி, தாக்குதலில் காயம் அடைந்தவர்களுக்கும், சேதம் அடைந்த சொத்துகளுக்கும் நஷ்டஈடு வழங்கப்படும்.

  • டாக்டர்கள், சுகாதார பணியாளர்களை தாக்குபவர்களை ஜாமீனில் வர முடியாத சட்டப்பிரிவின் கீழ் கைது செய்து அபராதமும், சிறை தண்டனையும் விதிக்க இந்த சட்டம் வகை செய்கிறது.

  • அதன்படி, டாக்டர்கள், சுகாதார பணியாளர்களை தாக்கி லேசான காயம் ஏற்படுத்தினால் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். அத்துடன் 6 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

  • டாக்டர்கள், சுகாதார பணியாளர்களை தாக்கி பலத்த காயம் ஏற்படுத்தினால் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதமும், அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

30 நாளில் விசாரணை

  • இது தொடர்பான வழக்கு விசாரணை 30 நாட்களுக்குள்

முடிவடையும். தீர்ப்பு அதிகபட்சம் ஓர் ஆண்டுக்குள் வழங்கப்பட்டுவிடும்.

  • சுகாதார பணியாளர்களுக்கான காப்பீடு விரிவுபடுத்தப்படும்.

  • சுகாதார பணியாளர்கள் அனைவரையும் பாதுகாக்க வகை செய்யும் இந்த அவசர சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக விரைவில் அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

பேட்டியின் போது அவரிடம் நிருபர்கள், பெருந்தொற்று தடுப்பு சட்டத்தில் செய்யப்படும் திருத்தங்கள், நாட்டில் கொரோனாவின் அச்சுறுத்தல் முடிந்த பிறகும் தொடர்ந்து நீடிக்குமா? என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பிரகாஷ் ஜவடேகர் பதில் அளிக்கையில், பெருந்தொற்று தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய அவசர சட்டம் ஒப்புதல் அளிப்பதாகவும், இது ஒரு நல்ல தொடக்கம் என்றும் கூறினார்.

ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்ததும் இந்த அவசர சட்டம் அமலுக்கு வரும்.

ரூ.15 ஆயிரம் கோடி நிதி

மந்திரிசபை கூட்டத்தை தொடர்ந்து, மத்திய அரசின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா பாதிப்பை தொடர்ந்து அவசர கால பணிகளுக்காகவும், நாட்டில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான நிதி ஒதுக்கீடு திட்டத்துக்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்து இருக்கிறது. இதில் கொரோனாவை தடுத்து நிறுத்தும் அவசர கால பணிகளுக்காக ஒதுக்கப்பட்டு இருக்கிறது. மீதம் உள்ள தொகை ஒன்று முதல் 4 ஆண்டுகள் வரையிலான சுகாதார திட்டப்பணிகளுக்கு செலவிடப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் தொகை கொரோனா நோய்த் தொற்றை கண்டறிதல், மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், ஆய்வுக்கூடங்கள் அமைப்பது, பாதுகாப்பு உபகரணங்கள், வெண்டிலேட்டர்கள், என்-95 முககவசம், மருந்துகள் வாங்குவது, தேசிய மற்றும் மாநில அளவில் சுகாதார திட்டங்களை வலுப்படுத்துதல் போன்றவற்றுக்காக செலவிடப்படும்.

காப்பீடு திட்டம்

இதில் முதல் கட்டமாக மத்திய சுகாதார அமைச்சகம், பிற அமைச்சகங்களுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. கொரோனா நோயாளிகளுக்கென்று தனி மருத்துவமனைகள், ஆய்வுக்கூடங்களை அமைப்பதற்காகவும், ஏற்கனவே உள்ள சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காகவும் இந்த திட்டத்தின் கீழ் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதலாக ரூ.3,000 கோடி வழங்கப்பட்டு இருக்கிறது.

கொரோனா தொற்று பரிசோதனைக்காக 13 லட்சம் கருவிகளை வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பரவலை தொடர்ந்து சமூக சுகாதார தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைத்து சுகாதார பணியாளர்களுக்கான (ஆஷா) காப்பீடு பிரதம மந்திரியின் ஏழைகள் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

dailythanthi