கொரோனா பாதிப்பில் இருந்து முழு அளவில் திரிபுரா விடுபட்டுள்ளது என முதல் மந்திரி பிப்லப் குமார் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
அகர்தலா, திரிபுராவில் உதய்பூர் நகரில் முதன்முதலில் ஒரு பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 6ந்தேதியில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு, பின்னர் நலம் பெற்றார். இதனால் கடந்த 16ந்தேதி தனி வார்டில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர் கண்காணிப்பு மையத்தில் இருந்து வருகிறார்.
இதேபோன்று ரைபிள் படையை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவருக்கு கடந்த 16ந்தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பன்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நேற்று நடந்த பரிசோதனையில், தொடர்ந்து இரண்டு முறை பாதிப்பு இல்லை என்பது உறுதியானது.
இதனால், கொரோனா பாதிப்பில் இருந்து முழு அளவில் திரிபுரா விடுபட்டுள்ளது என முதல் மந்திரி பிப்லப் குமார் பெருமிதத்துடன் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், திரிபுராவின் 2வது நபக்கும் அடுத்தடுத்து நடந்த பரிசோதனைகளில் பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனால் திரிபுரா கொரோனாவில் இருந்து முழு அளவில் விடுபட்டு உள்ளது.
ஒவ்வொருவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டு கொள்கிறேன். வீட்டில் இருங்கள் பாதுகாப்புடன் இருங்கள் என அவர் தெரிவித்து உள்ளார்.
dailythanthi