33 கோடி பேருக்கு ரூ.31 ஆயிரம் கோடி: ஏழைகள் நல திட்டத்தின் கீழ் நிதியுதவி

புதுடில்லி: நாடு முழுதும் கொரோனா வைரஸ் பரவி, பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமரின் ஏழைகள் நல திட்டத்தின் கீழ், 33 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு, 31 ஆயிரத்து, 235 கோடி ரூபாய் அளவிற்கு உதவி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நாடு முழுதும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டுள்ளோரை பாதுகாக்க, பிரதமரின் ஏழைகள் நல திட்டத்தின்கீழ், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த மாதம், நிவாரண உதவிகளை அறிவித்தார். 1.70 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த நிவாரண திட்டத்தை அமல்படுத்தும் நடைமுறைகளை, மத்திய மற்றும் மாநில அரசுகள் கண்காணித்து வருகின்றன.

இந்நிலையில், ஏழைகள் நல திட்டத்தின் கீழ், 33 கோடி பயனாளிகளுக்கு, 31 ஆயிரத்து, 235 கோடி ரூபாய் அளவிற்கு, உதவி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை, பிரதமரின் விவசாயிகளுக்கான திட்டத்தின்கீழ், எட்டு கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு, தலா, 2,000 ரூபாய் ‘டெபாசிட்’ செய்யப்பட்டுள்ளது.இதைத்தவிர, 20.05 கோடி பெண்களுக்கு, அவர்களின் ஜன் தன் வங்கி கணக்குகளில் தலா, 500 ரூபாய் டெபாசிட் செயப்பட்டுள்ளது. இதற்காக, மொத்தம், 10 ஆயிரத்து, 025 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.

வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், விதவை பெண்கள் என, 2.82 கோடி பேருக்கு, 1,400 கோடி ரூபாய் அளவிற்கு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. உஜ்வாலா யோஜனா திட்டத்தின்கீழ், 2.66 கோடி பேருக்கு, இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன.நிதி அமைச்சகம், சம்மந்தபட்ட துறை அமைச்சகங்கள், அமைச்சரவை செயலகம், பிரதமர் அலுவலகம் என அனைத்து தரப்பினரும் மக்களுக்கு நிவாரண உதவிகள் கிடைத்ததை உறுதிபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

dinamalar