மகாராஷ்டிராவில் ஊரடங்கு காலத்தில் குவியும் குடும்ப வன்முறை புகார்கள்

குடும்ப வன்முறை

கொரோனா அசுரனால் அதிக பாதிப்பை சந்தித்து வரும் மகாராஷ்டிராவில் குடும்ப வன்முறை சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

மும்பை : உலக நாடுகளுக்கெல்லாம் பொதுவான எதிரியாக மாறிவிட்ட கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் அரக்கன் சுகாதார, பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியதுடன், தன்னை அடக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வியூகத்தை கூட தனக்கான ஆயுதமாக பயன்படுத்தி வருகிறான்.

ஆம்! கொரோனா ஊரடங்கு காலத்தில் பல வீடுகள் குடும்ப வன்முறை களமாக மாறி வருகின்றன. கொரோனா அசுரனால் அதிக பாதிப்பை சந்தித்து வரும் மகாராஷ்டிராவில் குடும்ப வன்முறை சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

இது தொடர்பாக மாநில அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, மாநில உள்துறை மற்றும் டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ் நிறுவனம் ஆகியவை சேர்ந்து அமைத்து உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவுக்கு தற்போது குடும்ப வன்முறைகள், உளவியல் பிரச்சினைகள், உடல் மற்றும் மனரீதியாக பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் தொடர்பாக தினசரி 40 முதல் 50 அழைப்புகள் வருவதாக அங்குள்ள ஆலோசனை நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக அந்த பிரிவின் மூத்த ஆலோசகர் வைஷாலி ரானடே கூறியதாவது:-

சாதாரண சூழலில் ஒரு கணவர் அல்லது ஆண்கள் வேலைக்கு சென்ற பின் ஒரு பெண் இல்லத்தரசியாக வீட்டில் தனக்கான இடத்தை பெறுகிறாள். ஆனால் இப்போது அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள். இதனால் பெண்ணுக்கு வேலைப்பளு அதிகரிக்கலாம். இதில் ஆண்கள் உதவி செய்ய முன்வராத போது பிரச்சினை ஏற்பட்டு விடுகிறது. ஆண்கள் நாள் முழுவதும் வீட்டில் இருக்க விரும்ப மாட்டார்கள். மேலும் அவர்களுக்கு சிகரெட், மதுபானம் போன்ற போதைவஸ்துகள் இப்போது கிடைக்காததால் வீட்டிலேயே இருப்பது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்த கூடும்.

மேலும் வீட்டிலேயே இருப்பதால் பணபிரச்சினை, நம்பிக்கையின்மை போன்றவை அவர்களது விரக்தியின் அளவை அதிகரிக்கும். இதுபோன்ற காரணங்களினால் தற்போதைய ஊரடங்கு நேரத்தில் குடும்ப வன்முறை அதிகரித்து உள்ளது.

malaimalar