கொரோனா வைரசால் வந்த வினை – 160 கோடி பேர் வேலை இழக்கும் ஆபத்து

கொரோனா வைரஸ் பரவி வருவதின் காரணமாக முறை சாரா பொருளாதாரத்தில் 160 கோடி பேர் பெரும்

கொரோனா வைரஸ் கொலைகார வைரஸ் மட்டுமல்ல, உலகமெங்கும் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கிற தொழிலாளர் விரோத வைரசாகவும் உள்ளது.

சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி தோன்றிய இந்த கண்ணுக்குத் தெரியாத வைரஸ், ஏறத்தாழ 200 நாடுகளில் பரவி விட்டது.

இந்த வைரஸ் 32 லட்சத்துக்கும் அதிகமானோரை உலகமெங்கும் தாக்கி இருக்கிறது. 2 லட்சத்து 30 ஆயிரம் பேரின் உயிரையும் பறித்து இருக்கிறது.

இதன்காரணமாக செய்வது அறியாது உலக நாடுகள் அனைத்தும் கலக்கமுற்று இருக்கின்றன.

இந்த வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக உலக நாடுகள் பலவும் ஊரடங்கை அமல்படுத்தி இருக்கின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கிறார்கள். பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. உலக வர்த்தகம் முடங்கி கிடக்கிறது.

இந்த தருணத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான சர்வதேச தொழிலாளர் அமைப்பு, கொரோனா வைரஸ் பரவிவருகிற சூழலில் தனது மூன்றாவது கண்காணிப்பு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.

அதில் இடம்பெற்றிருக்கிற தகவல்கள் தொழிலாளர்கள் இனத்துக்கு எச்சரிக்கை மணி அடிப்பதுபோலவே இருக்கின்றன.

உலகமெங்கும் உள்ள மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 330 கோடி, அவர்களில் 200 கோடி பேர் முறை சாரா பொருளாதாரத்தின் கீழ்தான் வேலைகளை பெற்றிருக்கிறார்கள். இவர்கள்தான் தொழிலாளர் சந்தையில் மிகவும் பாதிப்புக்கு ஆளாகிறவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவி வருவதின் காரணமாக முறை சாரா பொருளாதாரத்தில் 160 கோடி பேர் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இதனால் அவர்கள் சம்பாதிக்கும் திறனை இழந்து வருகிறார்கள். உலக மொத்த தொழிலாளர்கள் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட சரிபாதி அளவுக்கு இருக்கிற இவர்கள் தங்களது வேலைகளையும், வாழ்வாதாரத்தையும் இழக்கிற ஆபத்து, கழுத்தின் மேல் கத்தியாக தொங்கிக்கொண்டிருப்பதை இந்த அறிக்கை படம் பிடித்துக்காட்டுகிறது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

  • கொரோனா வைரஸ் பரவுவதை தடுத்து நிறுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குகளால் சில்லரை மற்றும் உற்பத்தி துறையில் ஈடுபட்டிருந்த 43 கோடிக்கும் அதிகமான நிறுவனங்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றன.

  • 160 கோடி தொழிலாளர்கள், ஊரடங்காலும், மிகவும் பாதிப்புக்கு ஆளாகி உள்ள துறைகளில் பணியாற்றி வந்ததாலும் முதல் மாதத்திலேயே 60 சதவீத வருமான இழப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். இது ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவில் 80 சதவீதத்துக்கும் அதிகமான சரிவு. ஐரோப்பாவிலும், மத்திய ஆசியாவிலும் 70 சதவீதத்துக்கும் அதிகமான வீழ்ச்சி. ஆசிய, பசிபிக் நாடுகளில் 21.6 சதவீதம் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது.

  • பல கோடி தொழிலாளர்கள் வருமானம் இல்லாததால் சாப்பாட்டுக்கு வழியில்லை, பாதுகாப்பு இல்லை, எதிர்காலமும் இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். உலகமெங்கும் உள்ள கோடிக்கணக்கான வணிகங்கள் மூச்சு விடவில்லை. அவற்றிடம் சேமிப்பு இல்லை. கடன் வாங்கும் சூழலும் இல்லை என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைவர் குய் ரைடர் பதிவு செய்துள்ளார். இது தான் உலக தொழிலாளர்களின் உண்மையான முகங்கள். நாம் அவர்களுக்கு இப்போது உதவவில்லை என்றால் அவர் அழிந்துபோவார்கள் என்று எச்சரிக்கை மணியும் அடித்துள்ளார்.

  • கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடும்போது, இரண்டாவது காலாண்டில் வேலை நேரத்தில் 10.5 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. இது 30½ கோடி முழு நேர வேலைக்கு சமம். முதலில் கணித்திருந்தது 6.7 சதவீத வேலை நேர சரிவுதான். அதாவது 19½ கோடி முழு நேர வேலை இழப்புதான்.

  • இரண்டாவது காலாண்டில் அமெரிக்காவில் 12.4 சதவீத வேலை நேர இழப்பும், ஐரோப்பாவிலும், மத்திய ஆசியாவிலும் 11.8 சதவீத வேலை நேர இழப்பும், மொத்தமாக எல்லா பிராந்தியங்களையும் சேர்த்து பார்த்தால் 9.5 சதவீத வேலை நேர இழப்பும் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

  • கடந்த 2 வாரங்களில் ஊரடங்கு போடப்பட்டுள்ள நாடுகளில் வாழும் தொழிலாளர்களின் தேவை 81 சதவீதத்தில் இருந்து 68 சதவீதமாக குறைந்துள்ளது. இது சீனாவில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக இருந்தாலும், பிற இடங்களில் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

  • சில்லரை, உற்பத்தி, தங்குமிடம் மற்றும் பிற பொருளாதார துறைகளில் இயங்கும் 43 கோடியே 60 லட்சம் நிறுவனங்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளன. இவை சீர்குலைந்து போகும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளன.

இப்படி பல்வேறு கவலை தரத்தக்க அம்சங்கள் இந்த அறிக்கையில் இடம் பெற்றிருக்கின்றன.

தொழிலாளர்களையும், தொழில் நிறுவனங்களையும் குறிப்பாக சிறு தொழில் நிறுவனங்களையும், முறை சாரா தொழில் நிறுவனங்களையும் காப்பாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கங்கள் முடுக்கி விட வேண்டும்; பொருளாதாரத்தை மீண்டும் முடுக்கி விடுகிறபோது, வேலைவாய்ப்புகளை பெருக்குகிற அணுகுமுறை வேண்டும், வலுவான வேலை வாய்ப்பு கொள்கைகள் வேண்டும், சலுகை திட்டங்களை, கடன் நிவாரண நடவடிக்கைகளை சர்வதேச அளவில் ஒருங்கிணைக்க வேண்டும்.

இதையெல்லாம் செய்தால் மட்டுமே பொருளாதார மீட்டெடுப்பு நடவடிக்கைகள் ஆற்றல் வாய்ந்ததாக, நீடித்து நிற்கத்தக்கதாக அமையும் என்பது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கருத்தாக இருக்கிறது. அரசாங்கங்கள் வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்கிறபோதும், நிறுவனங்களுக்கு இதில் பக்க பலமாக இருக்கிறபோதும் மட்டுமே தொழிலாளர்களை காப்பாற்ற முடியும் என்பது தெளிவு.

malaimalar