கலைத்துறை சொந்தங்களின் இழப்புகள் என்னை மிகவும் பாதிப்படைய செய்திருக்கிறது – ராதாரவி இரங்கல்

கலைத்துறை சொந்தங்களின் இழப்புகள் என்னை மிகவும் பாதிப்படைய செய்திருக்கிறது என்று ராதாரவி இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர் மற்றும் நடிகர் இர்பான் கான் மறைவுக்கு ராதாரவி இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர் மற்றும் பன்முகத்திறமை வாய்ந்த நடிகர் இர்பான் கான் ஆகியோரது மறைவு எனக்கு மிகுந்த மனவருத்தம் ஏற்படுத்தியிருகிறது. உயிர்கொல்லி கொரோனா ஒரு புறம் உலகையே முடக்கி வைத்து பலி வாங்கிக்கொண்டிருக்க, இத்தகைய சூழலில் இந்த கலைத்துறை சொந்தங்களின் இழப்புகள் என்னை மிகவும் பாதிப்படைய செய்திருக்கிறது.

‘மேரா நாம் ஜோக்கர்’ (1970) என்ற தனது தந்தை ராஜ் கபூரின்  திரைப்படத்திலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ரிஷி கபூர், 2000 வரையிலே நாயகனாகவும், அதன்பின் தேர்ந்தெடுத்த சவாலான கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். சமீபத்தில் வெளியான ‘தி பாடி’ திகில் திரைப்படத்தில் அவரது நடிப்பு மிகுந்த வரவேற்பை பெற்றது.

நடிகர் இர்பான் கான் ஹிந்தி சினிமாவில் மட்டுமின்றி இங்கிலாந்து மற்றும் அமெரிக்க திரைப்படங்களிலும் நடித்து உலகளாவிய ரசிகர்களை கொண்டவர். தனது 30 வருட திரைவாழ்வில், தேசிய விருது, ஆசிய விருது, மற்றும் இந்திய அரசின் நான்காவது மிகவும் உயரிய சிவிலியன் விருதான ‘பத்ம ஸ்ரீ’ விருதையும் வென்ற பெருமைக்குரியவர்.

இத்தகைய சிறந்த கலைஞர்களின், சிறந்த மனிதர்களின் மறைவு என்னில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி இருந்தாலும், அவர்களது குடும்பங்களுக்கு இந்த சங்கடமான நேரத்தில் நான் ஆறுதல் கூறவும் கடமைப்பட்டிருக்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று கூறியுள்ளார்.

malaimalar