100 மூட்டை அரிசி வழங்கிய ரஜினி – மற்ற நடிகர்களுக்கும் அழைப்பு விடுத்த ராகவா லாரன்ஸ்

ரஜினி- ராகவா லாரன்ஸ்

நடிகர் ராகவா லாரன்ஸ் கேட்டவுடன் நூறு மூட்டை அரிசி வழங்கி உதவி செய்து இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

கொரோனா வைரஸ் தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக, வேலைக்கு செல்ல முடியாமல், பலர் உணவுக்கே கஷ்டப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பலர் தங்களால் முடிந்த உதவியை முடியாதவர்களுக்கு செய்து வருகின்றனர்.

இதில் நடிகர் லாரன்ஸ் செய்து வரும் உதவிகள் குறிப்பிடத்தக்கது. கொரோனா நிவாரண நிதியாக 3 கோடி அளித்த அவர், தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களை முடிந்தளவில் அளித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த கஷ்டமான சூழ்நிலையில் பலர் உதவி கேட்டு என்னை தொடர்பு கொண்டு வருகின்றனர். அவர்கள் கேட்பது பணம் அல்ல, உணவுக்கு தேவையான பொருட்கள் மட்டுமே. என்னால் முடிந்தளவு நானும் உதவிகள் செய்து வருகிறேன். என் ஒருவனால் மட்டுமே அனைவருக்கு உதவி செய்திட முடியாது.

இதுகுறித்து என் தம்பியிடம் பேசிய போது, இந்த முயற்சியில் இன்னும் பலரை சேர அழைக்கலாம் என கூறினார். இதை பற்றி நடிகர் ரஜினியிடம் பேச, அவர் 100 மூட்டை அரிசிகளை அனுப்பி வைத்தார். இதையடுத்து இந்த முயற்சியில் கை கோர்க்க நான் அழைப்பு விடுக்கிறேன்.

நடிகர்கள் கமல், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்களும் அவர்களின் ரசிகர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என உதவ விருப்பமிருப்பவர்கள் அனைவரும், இந்த முயற்சியில் இணையுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

malaimalar