தற்போதுள்ள சூழ்நிலையில் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் வசூலிப்பதா?- ராமதாஸ் கண்டனம்

டாக்டர் ராமதாஸ்

கொரோனா வைரஸ் நிலைமை சரியாகும் வரை கல்விக் கட்டணம் வசூலிப்பதை தனியார் பள்ளி நிர்வாகங்கள் நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வறட்சி, மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும் போது அதிகபட்சமாக ஓரிரு வாரங்களில் பாதிப்புகள் குறைந்து இயல்பு நிலை திரும்பி விடும். ஆனால், கொரோனா வைரஸ் பேரிடர் எப்போது தணியும் என்று தெரியவில்லை.

இத்தகைய சூழலில் கல்விக் கட்டணத்தை, வரும் 15-ம் தேதிக்குள் செலுத்தாத குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் சேர்க்கப்பட மாட்டார்கள்; அவர்களுக்கான வகுப்புகள் மீண்டும் நடத்தப்பட மாட்டாது என்று பள்ளி நிர்வாகங்கள் எச்சரிப்பது அழகல்ல. வணிக நிறுவனங்கள் இதுபோன்று கூறலாம். கல்விக் கூடங்கள் ஒருபோதும் கூறக்கூடாது.

எனவே, வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளிடம் மட்டுமாவது, நிலைமை சரியாகும் வரை கல்விக் கட்டணம் வசூலிப்பதை கருணை அடிப்படையில் தனியார் பள்ளி நிர்வாகங்கள் நிறுத்தி வைக்க வேண்டும். அதையும் மீறி கல்விக் கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை அச்சுறுத்தும் பள்ளி நிர்வாகங்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

malaimalar