கொரோனா ஒரு புறம், வெயிலின் உக்கிரம் மறுபுறம் என இரட்டை தாக்குதலால் தினம் தினம் அவதிக்குள்ளாகும் சென்னைவாசிகள் -மண்ணை குளிர்விக்க மழை பெய்யாதா…? என ஏக்கம்

ஒரு புறம் கொரோனா பீதி, மறுபுறம் வெயிலின் உக்கிரம் என தினம் தினம் இரட்டை தாக்குதலால் சென்னைவாசிகள் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். மண்ணை குளிர்விக்க மழை பெய்யாதா… என மக்கள் ஏக்கம் தெரிவித்து வருகிறார்கள்.

கத்திரி வெயிலின் கோரம்

தமிழகத்தில் கத்திரி வெயில் தனது கோர தாண்டவத்தை காட்டி வருகிறது. சென்னையில் கொரோனா தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பை போல நாளுக்கு நாள் வெயிலின் தாக்கமும் கூடிக்கொண்டே செல்கிறது. ஏற்கனவே கொரோனா பீதியால் வீடுகளில் முடங்கி கிடக்கும் மக்கள் வெயிலின் உக்கிரம் தாங்காமல் புழுக்கத்தால் வெந்து நொந்து போகிறார் கள். அதேவேளை சருமகால நோய்கள் போன்ற பிரச்சினையிலும் சிக்கி தவிக்கிறார்கள்.

சமூக இடைவெளியை கடைப்பிடிக்க கொண்டு செல்கிறார்களோ, இல்லையோ… வெயிலின் தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அனைவரும் குடைபிடித்து செல்வதையே பார்க்க முடிகிறது. தற்போது ஊரடங்கில் அரசு விதித்த தளர்வுகளால் நகரில் ஒரு சில இடங்களில் சாலையோரத்தில் தர்பூசணி, கிர்ணி ஜூஸ் கடைகள் முளைத்துள்ளன. ஆனாலும் மக்கள் நடமாட்டம் அவ்வளவாக இல்லாத சூழ்நிலையே நிலவுகிறது.

இரட்டை தாக்குதலில் சென்னைவாசிகள்

கொளுத்தும் வெயில் காரணமாக சாலையில் அனல் காற்று வீசுகிறது. இதனால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகிறார்கள். வெயில் வாட்டி வதைத்து வருவதால் உடலுக்கு குளிர்ச்சியூட்டும் பொருட்களை மக்கள் உட்கொண்டு சூட்டை தணித்து வருகிறார்கள். வீட்டிலேயே எலுமிச்சை ஜூஸ், குளுக்கோஸ் உள்ளிட்டவை கலந்து குடித்து உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்கிறார்கள்.

மாலை மற்றும் இரவு நேரங்களில் வீட்டின் வளாகங்கள் மற்றும் தெருக்களில் சிறிது தூரம் நடந்தும் மக்கள் இளைப்பாறுவதை பார்க்க முடிகிறது. அந்தளவு வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. வீடுகளில் மின்விசிறிகளுக்கு ஓய்வு கொடுக்கவே மனமில்லாத சூழலே நிலவுகிறது. ஏ.சி. எந்திரங்களும் அதிகமான வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவால் பீதி ஒரு பக்கம், வெயில் கோரத்தினால் புழுக்கம் ஒரு பக்கம் என இரட்டை தாக்குதலால் தினம் தினம் அவதிப்பட்டு வருகிறார்கள் சென்னைவாசிகள். அந்தளவு வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது.

மழை பெய்யாதா…

கொளுத்தும் வெயில் காரணமாக மக்களின் உணவு பழக்கமும் மாறியிருக்கிறது என்பதே உண்மை. வாய்க்கு ருசியாக உணவு சாப்பிட்டவர்கள் கூட இந்த கத்தரி வெயிலில் சூடாக சாப்பிட யோசிக்கிறார்கள். பெரும்பாலான வீடுகளில் தயிர் சாதத்தையும், பழைய சோற்றையும் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுகிறார்கள். வெள்ளரி, தர்பூசணி போன்ற பழங்கள் சாலையில் சென்றால் உடனடியாக வாங்கி வைத்துக்கொள்கிறார்கள்.

தற்போதைய சூழலில் கொரோனா பீதி, வெயிலின் உக்கிரம் என இரட்டை தாக்குதலால் நிலைகுலைந்து போயிருக்கும் மக்கள் மழை பெய்து சூட்டை தணிக்காதா? பூமியை குளிர்விக்காதா? என ஏங்கி போயிருக்கிறார்கள். பிற நகரங்களில் எல்லாம் மழை பெய்யும்போது இந்த சென்னைக்கு மட்டும் அப்படி என்ன ஆச்சு? என்று மக்கள் ஆத்திரம் கொள்வதையும் பார்க்கமுடிகிறது. தற்போதைய சூழலில மனதையும், உடலையும் குளிர்விக்க மழை பெய்யாதா? என்பதே சென்னைவாசிகளின் ஏக்கமாக இருக்கிறது.

dailythanthi