சென்னை, பிரபல நகைச்சுவை நடிகர் சூரி, நேற்று காலை சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்று, கொரோனா வைரஸ் பரவலில் இருந்து மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதற்காக போலீசாருக்கு நன்றி சொன்னார். போலீஸ் நிலையத்தில் இருந்த அனைத்து போலீஸ்காரர்களிடமும் நோட்டை கொடுத்து ஆட்டோகிராப்பும் வாங்கினார். பின்னர் சூரி நிருபர்களிடம் கூறியதாவது:-
“கொரோனா வைரஸ் பரவலால் உலகமே அச்சத்தில் உள்ளது. இந்த நிலையில் தங்களை பற்றி கவலைப்படாமல் மக்களின் உயிரை பாதுகாக்கும் பணியில் இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் காவல்துறையினர் உழைத்து வருகிறார்கள். சினிமாவில்தான் நாங்கள் கதாநாயகர்கள். நிஜத்தில் கொரோனாவுக்கு எதிராக களத்தில் நிற்கும் காவல்துறையினர், மருத்துவர்கள். தீயணைப்பு வீரர்கள். பத்திரிகையாளர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள்தான் உண்மையான கதாநாயகர்கள். காவல்துறை யினர் எல்லைச் சாமி போல் இருந்து நம்மை காத்து வருகின்றனர். அவர்களிடம் இன்று ஆட்டோகிராப் வாங்கியது பெருமையாக உள்ளது. 60 காவல்துறையினர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளனர். அவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்”.
இவ்வாறு சூரி கூறினார்.
dailythanthi