டிரம்ப் மீது மக்களுக்கு அதிருப்தி – கலிபோர்னியாவில் இருந்து நடிகை தீபா ராமானுஜம் பேட்டி

நடிகை தீபா ராமானுஜம்

டிரம்ப் மீது மக்களுக்கு அதிருப்தி என்று கலிபோர்னியாவில் இருந்து நடிகை தீபா ராமானுஜம் பேட்டி அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் அம்மா வேடங்களில் நடிப்பவர்களுக்கு கவனம் ஈர்க்க வாய்ப்பு கிடைப்பது குறைவு. ஆனால் தான் நடித்த பிச்சைக்காரன், பசங்க 2, ரஜினி முருகன், ஸ்பைடர், சிவப்பு மஞ்சள் பச்சை உள்பட அனைத்து படங்களிலும் தனியாக தெரிந்து கவனம் ஈர்த்தவர் தீபா ராமானுஜம். சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் தீபா பேசிய பெண்களின் உடை தொடர்பான வசனம் தனியாகவே சமூகவலைதளங்களில் பிரபலம்.

கணவருடன் அமெரிக்காவில் வசிக்கும் இவர் அடிப்படையில் நாடக இயக்குனர், நாடக நடிகை, தொழில் முனைவோர். அமெரிக்காவில் கொரோனா தாக்கம் அதிகரிக்கும் இந்த சமயத்தில் அது குறித்து மாலை மலருக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:

அமெரிக்கா எப்படி இருக்கிறது?
கலிபோர்னியாவில் சான்பிரான்சிஸ்கோ பகுதியில் வசிக்கிறேன். மார்ச் 21 ஆம் தேதி இந்தியா திரும்ப திட்டமிட்டு இருந்தேன். கொரோனா காரணமாக ஊரடங்கை முதலில் அறிவித்தது கலிபோர்னியாதான். அந்த அறிவிப்பு வெளியானதும் எனது திட்டத்தை ரத்து செய்து இங்கேயே இருந்துவிட்டேன். அந்த முடிவு நல்லதாக போய்விட்டது. இந்தியா வந்து இருந்தால் தனியாக சிரமப்பட்டு இருப்பேன். இங்கே அனைவருக்கும் கொரோனா பயம்தான். எங்களுக்கு வீட்டிலேயே இருப்பது இப்போது பழகி விட்டது. ஆனால் இந்த அளவுக்கு உலக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன்.

எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறதே?
ஆமாம். நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. உலகம் முழுக்கவே அதிகரித்தாலும் அமெரிக்காவில் மிக வேகமாக பரவுகிறது.

ஊரடங்கு அங்கு எப்படி இருந்தது?
நான் இருக்கும் கலிபோர்னியாவில் ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது. நாங்கள் மார்ச் 19 லிருந்து வீட்டுக்குள்ளேயேதான் முடங்கி இருக்கிறோம். அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகளுக்கு சென்றாலும் தெளிவாக திட்டமிட்டு வாங்க வேண்டியதை எழுதி எடுத்து சென்று வாங்கி முடித்த உடனே திரும்பி விடுகிறோம். வாங்கும் பொருட்களையும் சுகாதாரமான முறையில் சுத்தப்படுத்தியே பயன்படுத்துகிறோம். ஒரு கடிதம் வந்தால் கூட அதை தொடுவதற்கு தயங்குகிறோம். அந்த அளவுக்கு கவனமாக இருக்கிறோம். இனி இந்த வாழ்க்கையை பழகிக்கொள்ள தான் வேண்டும். இத்தனை கவனமாக இருந்தாலும் கலிபோர்னியா கொரோனா பாதிப்பில் 5 வது இடத்தில் இருக்கிறது.

அமெரிக்க மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது?
கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். கொரோனா தந்த உயிர் பயத்தை விட வேலை பறி போவதால் எழும் மன அழுத்தமும் முக்கிய காரணம். நிறைய துறைகள் இழுத்து மூடிவிட்டார்கள். இதனால் பெரும்பாலானோர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துவிட்டனர். கொரோனாவுக்கு பின்னும் இந்த பாதிப்புகள் தொடருமே என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. அரசும், மருத்துவர்களும் அதை போக்க முயற்சிகள் எடுத்து வருகிறார்கள்.

கொரோனாவை வைத்து அமெரிக்காவில் நடக்கும் அரசியல் மாற்றங்கள், குறிப்பாக டிரம்பின் பேச்சு, நடவடிக்கைகளுக்கு மக்கள் என்ன சொல்கிறார்கள்?
அவர் கட்சியை சார்ந்த பலர் அவர் சொல்வதைதான் நம்புகிறார்கள். ஆனால் எங்கள் நண்பர்கள் அனைவருக்குமே அவர் இதை கையாளும் முறையில் அதிருப்தி இருக்கிறது. ஆனால் அமெரிக்க அரசியல் அமைப்பில் மாகாணங்களை பொறுத்த வரை கவர்னர்களுக்கு தனி அதிகாரம் உண்டு. அந்த வகையில் எங்கள் கவர்னர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தான் முன்னெடுக்கிறார்.

அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களின் நிலையில் எதுவும் மாற்றம்?
இங்கே இருக்கும் இந்தியர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் வேலையை இழந்து விட்டால்தான் கடும் சிரமத்துக்கு ஆளாவார்கள். 60 நாட்களுக்குள் அவர்கள் புது வேலை தேடிக் கொள்ள வேண்டும், அல்லது அவர்களது விசா ஸ்டேடஸை மாற்றிக் கொள்ள வேண்டும். கடந்த 2 மாதங்களில் அமெரிக்காவில் 3 கோடிக்கும்  (33.5 மில்லியன்) அதிகமான மக்கள் வேலை இழந்துள்ளார்கள். இதில் இந்தியர்களும் அடக்கம். இப்போது எதிலுமே ஒரு நிலை இல்லாத தன்மை இருப்பதால் இந்தியர்கள் மட்டுமல்லாமல் அனைவருக்குமே ஒரு பயம் இருக்கிறது.

ஊரடங்கை தளர்த்திய பிறகு நிலைமை எப்படி இருக்கும்?
ஒருவரை ஒருவர் நேரில் சந்திப்பது குறையும் என்று நினைக்கிறேன். ஜூம் போன்ற செயலிகள் நமது வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் இங்கே பள்ளி, கல்லூரிகள் வகுப்புகளை ஆன்லைனில் மாற்றி விட்டனர். அமெரிக்காவில் இருக்கும் பாடல், நடன வகுப்பு ஆசிரியர்கள் ஆன்லைனில் தங்கள் வகுப்புகளை தொடங்கி விட்டார்கள். மருத்துவர்களும் வீடியோ கால் மூலமாக ஆலோசனை வழங்குகின்றனர். நண்பர்களை சந்திப்பதும் ஆன்லைன் மூலமாக தான் என்று மாறிவிட்டது. இனி இதுபோலத் தான் வாழ பழகிக்கொள்ள வேண்டும்.

சினிமாத்துறை என்ன ஆகும்?
நமது துறை மக்கள் அதிக அளவில் கூடி பணிபுரிய வேண்டிய துறை. இதில் சமூக விலகலை கடைபிடிப்பது சிரமமான ஒன்று. மாஸ்க் அணிந்து படங்களில் நடிக்கவும் முடியாது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் பிரச்சினை இல்லை. அதுவரை எல்லோருக்குமே மனதுக்குள் பயம் இருந்துகொண்டே இருக்கும். மக்கள் பயமில்லாமல் தியேட்டருக்கு போய் படம் பார்க்க எத்தனை நாள் ஆகும் என்று தெரியவில்லை. ஆனால் திரைத்துறையில் அன்றாட வருமானத்தை நம்பி இருக்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தான்இதனால் அதிகம் பாதிக்கபட்டுள்ளனர். சினிமா தொழிலாளர்கள் மட்டுமல்ல… ஆட்டோ ஓட்டுனர்கள் உள்பட எல்லா தொழிலாளர்களுமே சிரமத்தில் தான் இருக்கிறார்கள்.

அம்மா வேடமாக இருந்தாலும் தனியாக தெரிவது எப்படி?
சினிமா என்பது சம்பளத்தை தாண்டி என்னுடைய பேஷன். எனவே கவனமாக தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். சசி போன்ற ஒருசில இயக்குனர்களே பெண் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். சசி சார் என்றால் கதை கேட்கமால் நடிக்கும் அளவுக்கு நம்பிக்கை உண்டு.

டைரக்‌ஷன் எப்போது?
இங்கே “கிரியா” என்ற நாடக குழவை கடந்த 20 வருடங்களாக நடத்தி வருகிறேன். இந்தியாவுக்கும் வந்து நாடகம் போட்டுள்ளோம். எங்களது நாடகங்களை K.பாலசந்தர், கமல்ஹாசன், சிவ கார்த்திகேயன், இயக்குனர் சசி உள்பட பலர் நேரில் பார்த்து பாராட்டியுள்ளனர். சினிமா டைரக்‌ஷன் என்னுடைய கனவு. கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதை உட்பட, பல கதைகள் தயாராக இருக்கிறது. விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன்.

malaimalar