இந்தியா முழுவதும் ஜூலை மாதம் பள்ளிகள் திறக்கப்படுகிறது- மத்திய அரசுக்கு குழு பரிந்துரை

பள்ளி மாணவிகள்

பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் உள்ள பள்ளிகளில் 8 முதல் 12-ம் வகுப்பு வரை கோடை விடுமுறைக்கு பின்பு ஜூலை மாத மத்தியில் திறக்கலாம் என்று மத்திய அரசுக்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் குழு பரிந்துரைத்துள்ளது.

புதுடெல்லி: கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன.

சில பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகின்றன. இதற்கிடையே பள்ளிகளை மீண்டும் எப்போது திறப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

இது தொடர்பாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் குழு சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த குழு தனது அறிக்கையை மத்திய மனித வள மேம்பாட்டு துறையிடம் அளித்துள்ளது.

அதில், “பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் உள்ள பள்ளிகளில் 8 முதல் 12-ம் வகுப்பு வரை கோடை விடுமுறைக்கு பின்பு ஜூலை மாத மத்தியில் திறக்கலாம்” என்று பரிந்துரைத்துள்ளது.

மேலும் ஒவ்வொரு வகுப்பிலும் 3-ல் ஒரு பங்கு மாணவர்களை மட்டுமே அனுமதிக்கலாம் என்றும், தனி மனித இடைவெளி பராமரித்து பள்ளிகளை ஷிப்டு முறையில் இயக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளி மாணவர்களை மட்டும் அனுமதிக்கலாம். எல்.கே.ஜி. முதல் 7-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களை நிலைமை சீராகும் வரை பள்ளிக்கு அனுமதிக்க வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா கட்டுப்பாடு வழிகாட்டுதலை பின்பற்றவும், மற்றவர்களை பின்பற்ற செய்யவும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். எந்தவித கூட்டங்களும் நடத்தக்கூடாது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா பாதுகாப்புக்காக விதிக்கப்பட்டிருக்கும் விதிகளை சிறு குழந்தைகள் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்பதால் அவர்கள் வீட்டில் இருந்தபடியே பாடங்களை படிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் கூறும்போது, “தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் குழு அளித்துள்ள பரிந்துரைகள் மீது இறுதி முடிவுகள் சுகாதாரம் மற்றும் உள்துறை அமைச்சகங்களிடம் இருந்து ஒப்புதல் வந்த பிறகுதான் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எங்களது வழிகாட்டுதல்கள் பொதுவானதாக இருக்கும். மாநில அரசுகள் அவர்களது பாதிப்பை பொறுத்து சொந்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து கொள்ள முடியும்.

malaimalar