டிப்ஸ்: மழை, குளிர்காலத்தில் பின்பற்ற வேண்டியவைகள்!

குளிர்காலத்தில் முடிந்தவரை வெதுவெதுப்பான சூழ்நிலையில் இருப்பது அவசியம். ஒருவரால், அவரின் எதிர்ப்பு சக்தியை பொறுத்து குளிரை தாங்க முடியும். ஆனால், குளிரால் தொற்றும் தொற்றுக்கிருமியை சாதாரணமாக ஒதுக்க முடியாது. கோடை காலத்தை விட, மழைக்காலம், குளிர் காலத்தில் தான் தொற்றுக்கிருமிகள் எளிதில் பரவும் தொற்றும். அதனால், நவம்பர் முதல் மார்ச் வரை உஷாராகவே இருப்பது நல்லது.

சாட்’ வரும் பருவம்

ஆங்கிலத்தில் ‘சாட்’ எனப்படும் ‘சீசனல் அபெக்டிவ் டிசார்டர்’ என்ற பாதிப்பு, குளிர்காலத்தில்தான் அதிகமாக ஏற்படுகிறது. வைட்டமின் ‘டி’ இல்லாததால் ஏற்படும் பருவ உடல் நிலை பாதிப்புகளை இது குறிக்கும்.

உடல் வலி, காய்ச்சல் உட்பட எல்லா பாதிப்பும் இதில் அடங்கும். வைட்டமின் “டி” சத்து, சில உணவு வகைகளில் தான் கிடைக்கிறது. குளிர்காலத்தில் இந்த உணவுகளை சேர்த்துக்கொள்வது முக்கியம்.

வைரஸ் – பாக்டீரியா

குளிர், மழைக்காலங்களில் எளிதில் பரவுவது வைரஸ் தொற்றுக்கிருமிகள்தான். கோடை காலத்தில் வருவதை விட, ஜலதோஷம், ப்ளூ காய்ச்சல் போன்றவை குளிர் காலத்தில் யாருக்கும் வரத்தான் செய்யும். அதே சமயம், பாக்டீரியா தாக்குதல் என்பது, குளிர் காலத்தை விட கோடை காலத்தில்தான் பரவும். அதிலும், மிக அதிக வெப்பம் இருந்தால் தொற்றார் இரண்டுங்கெட்டானாக வெப்ப சூழ்நிலை இருந்தால் பாக்டீரியாக்கள், பிராணிகள், பறவைகளில் இருந்து தொற்றும்.

ஹாச்… ஹாச்…

ஹாச் என்று தும்முவதில் ஆரம்பித்து ஜலதோஷம் போன்ற பிரச்னைகள், இப்படிப்பட்ட சுற்றுச்சூழல் மாசுகளால்தான் ஏற்படுகிறது. அலர்ஜியால், சளி, இருமல், கண் எரிச்சல், மூக்கு ஒழுகுவது, தொண்டை கரகரப்பு போன்றவை ஏற்படும். இதனால், எந்த வேலையும் ஓடாது; தூக்கமும் வராது. மருத்துவரிடம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்வதுதான் சரி.

சுடு தண்ணீர் குடிங்க…

எந்த ஒரு காலகட்டத்திலும் உடலுக்கு எல்லா வகையிலும் நல்லது பயக்கக்கூடியது குடிநீர்தான். மழைக்காலத்தில் பாதுகாப்பான நீராக குடிக்க சூடாக்கி குடிப்பதுதான் சரியானது. ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் வரை குடிக்கலாம். ஆனால், பலரும் ஏதோ காரணத்தால் அதை கண்டுகொள்வதில்லை. இது தவறானது; தண்ணீர் குடித்து வந்தால், உடலில் எதிர்ப்பு சக்தி ஏற்படுகிறது. பளபளப்புக்கும் இது ஒரு முக்கிய காரணம்.

வீட்டுக்குள் நசநச…

மழை, குளிர் காலத்தில் இன்னொரு பிரச்னை, வீட்டில் சுற்றுச்சூழல் சுகாதாரம் பாதிக்கப்படுவதுதான். அளவுக்கு அதிகமான நபர்கள் புழங்கும் அறையில் இருந்து எளிதாக தொற்றுக்கிருமி பரவி விடும். பலவீனமானவர்களை அது உடனே தொற்றி விடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படிப்பட்டவர்களுக்கும் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும். அதனால் தான் ப்ளூ காய்ச்சல், ஜலதோஷம் சுலபமாக பரவுகிறது.

வைட்டமின் ‘டி’

வைட்டமின் ‘டி’ மிகவும் முக்கியமானது; அதுதான் தோல் பாகங்கள் பளபளப்புக்கு காரணமாகிறது. சூரிய வெளிச்சத்தில் இருந்து கிடைக்கும் இந்த வைட்டமின் ‘டி’ குளிர் காலத்தில் கிடைக்காது. தோலுக்கு பளபளப்பை தருவது மட்டுமின்றி, எலும்பு பாதுகாப்புக்கும் காரணமாகிறது. அதனால், பெண்களுக்குதான் இந்த வைட்டமின் இல்லாமல் பாதிப்புகள் வரும்.

சீசன் அலர்ஜி

சீசன் அலர்ஜி என்றால் என்ன தெரியுமா? மரம், காற்று, சிறிய பூச்சிகள், புழுக்கள் போன்றவற்றால் பரவும் கிருமிகள் மூலம் ஏற்படும் அலர்ஜி பாதிப்புகள். கோடைக் காலங்களில் தான் இதுபோன்ற அலர்ஜி மாசுகள் பாதிப்பை ஏற்படுத்தும்.

மரத்தில் இருந்து விழும் வித்தியாசமான துகள்கள், நாய் போன்ற பிராணிகளிடம் இருந்து பரவும் வாயு, படிமம், சுற்றுச்சூழல் மாசுகள் தான் இப்படிப்பட்ட அலர்ஜிகளுக்கு காரணம். மழை, குளிர் காலங்களில் இந்த பிரச்னை இருக்காது.

அதிகாலையில்….

வயதான சிலர் அதிகாலையில் எழும் பழக்கம் கொண்டவர்கள். அவர்கள் இந்த குளிர் காலத்தில் சற்று நேரம் கழித்து எழுவது நல்லது. அதுபோல, உடற்பயிற்சியை செய்வதையும் வெயில் சற்று வந்து வெதுவெதுப்பு ஏற்பட்டதும் செய்யலாம். குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்ப்பது மிக முக்கியம். ஜலதோஷம், காய்ச்சல் வருவது பெரும்பாலும் அதனால்தான்.

நன்றி : கூடல்