கொரோனா வைரசால் அதிக உயிரிழப்பு- உலக அளவில் 8-வது இடத்தில் இந்தியா

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் நேற்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவர பட்டியலில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 12,881 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 66 ஆயிரத்து 946 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் புதிதாக 334 பேர் உயிரையும் கொரோனா பறித்துள்ளது. இதன் மூலம் பலியானவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்து 237 ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 94 ஆயிரத்து 325 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில், 1 லட்சத்து 60 ஆயிரத்து 384 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் ஆரம்பம் முதலே கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்தாலும், பலி எண்ணிக்கை கட்டுக்குள் இருந்தது. ஆனால் மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் பல கொரோனா மரணங்கள் விடுபட்டு இருந்த நிலையில், அவையும் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட பட்டியலில் இணைக்கப்பட்டது. இதனால் நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்கள் விகிதம் 2.8 சதவீதத்தில் இருந்து 3.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் உலக அளவில் 4-வது இடத்தில் இருக்கும் இந்தியா, அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளின் பட்டியலில் 8-வது இடத்தில் இருப்பதாக ஜான் ஹாப்கின்ஸ் வெளியிட்டுள்ள தரவு காட்டுகிறது.

முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவில் கொரோனா சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேரை பலி வாங்கி இருக்கிறது. 2-வது இடத்தில் உள்ள பிரேசிலில் பலி எண்ணிக்கை 47 ஆயிரத்தை நோக்கி செல்கிறது. இங்கிலாந்தில் கொரோனா 42 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் உயிரை பறித்து இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், மெக்சிகோவை தொடர்ந்து 8-வது இடத்தில் இந்தியா இருக்கிறது.

இந்தியாவில் கொரோனாவால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை மராட்டிய மாநிலம் சந்தித்துள்ளது. அங்கு 1 லட்சத்து 16 ஆயிரத்து 752 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ள நிலையில், பலியானவர்கள் எண்ணிக்கை 5,651 ஆக உள்ளது. தமிழகத்தில் புதிதாக 2,141 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி இருப்பதுடன், 49 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 52 ஆயிரத்து 334 ஆகவும், பலி எண்ணிக்கை 625 ஆகவும் உயர்ந்து இருக்கிறது. 3-வது இடத்தில் உள்ள டெல்லியில் பாதிப்பு 47 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,904 ஆக உள்ளது.

மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை அடைப்புக்குறிக்குள் வருமாறு:-

குஜராத் பாதிப்பு- 25,093, (பலி- 1,560), உத்தரபிரதேசம் 14,598 (435), ராஜஸ்தான் 13,542 (313), மேற்குவங்காளம் 12,300 (506), மத்தியபிரதேசம் 11,244 (482), அரியானா 8,832 (130), கர்நாடகா 7,734 (102), ஆந்திரா 7,071 (90), பீகார் 6,942 (44), தெலுங்கானா 5,675 (192), ஜம்மு காஷ்மீர் 5,406 (65), அசாம் 4,605 (8), ஒடிசா 4,338 (11), பஞ்சாப் 3,497 (78), கேரளா 2,697 (20), உத்தரகாண்ட் 2,023 (26), ஜார்கண்ட் 1,985 (10), சத்தீஸ்கார் 1,864 (10), திரிபுரா 1,135 (1), லடாக் 687 (1), கோவா 656, இமாசலபிரதேசம் 569 (8), மணிப்பூர் 552, சண்டிகார் 368 (6), புதுச்சேரி 245 (7), நாகாலாந்து 193, மிசோரம் 121, அருணாசலபிரதேசம் 99, சிக்கிம் 70, தாதர்நகர் ஹவேலி 57, அந்தமான் நிகோபார் தீவு 44, மேகாலயா 44 (1).

  • அடைப்புக்குறி இன்றி பாதிப்பு மட்டும் குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்களில் இதுவரை கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

malaimalar