‘வீர மரணம் அடையும் வீரர்கள் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி’

சென்னை: ‘வீர மரணம் அடையும், ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு, தமிழக அரசு சார்பில், 1 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும்’ என, முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய – சீன எல்லையான லடாக்கில் நடந்த மோதலில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, ராணுவ வீரர் பழனி வீர மரணமடைந்தார். அவரது இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர், நிவாரண நிதியாக, 20 லட்சம் ரூபாய் மற்றும் தகுதி அடிப்படையில், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

‘ராணுவ வீரர்கள், நாட்டுக்காகவும், நம் பாதுகாப்பிற்காகவும் போரிட்டு, வீர மரணம் அடைகின்றனர். ‘அவர்களின் குடும்பத்தினருக்கு, இந்த நிதி போதுமானதாக இருக்காது; அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், தமிழக அரசு, நிதி உதவியை, 1 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்’ என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல், என்.தியாகராஜன் கூறியதாவது: ஒவ்வொரு ராணுவ வீரரின் இறப்பு என்பது, நாட்டிற்கும், வீட்டிற்கும் மிகப்பெரிய இழப்பு. ராணுவ வீரர் பழனியின் குடும்பத்தை பார்க்கும் போது, அவருக்கு எட்டு மற்றும் 10 வயதில் குழந்தைகள் உள்ளன. பரிதாபமான நிலையில், அவர்களது குடும்பம் இருக்கிறது. ஒவ்வொரு மாநிலமும், இது போன்ற ராணுவ வீரர்களின் குடும்பத்தை பாதுகாப்பதை, நல்ல நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதை, தலையாய கடமையாக செய்து வருகின்றன. மத்திய அரசும் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்கிறது.

நடவடிக்கை: தமிழக அரசும், பழனியின் குடும்பத்திற்கு, 20 லட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்கி உள்ளது. இது, அவர்களின் குடும்பத்தை மாற்றக்கூடிய வகையில் இருக்காது. டில்லி, மஹாராஷ்டிரா மாநிலங்களில், 1 கோடி ரூபாய் நிதி உதவி வழங்குகின்றனர். எனவே, போரில் வீர மரணம் அடையும், வீரர்களின் குடும்பத்தினரின் வாழ்வை மேம்படுத்த, மாற்றத்தை ஏற்படுத்த, இதர மாநிலங்களைப் போல அதிக நிதி உதவி வழங்க வேண்டும்.அதற்கான நடவடிக்கையை, தமிழக முதல்வர் எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

dinamalar