சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்- வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி

உயிரிழந்த தந்தை, மகன்

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டதையடுத்து, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

சாத்தான்குளம்: சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் மரணம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. அப்போது, முதல்நிலை பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் மாஜிஸ்திரேட் அளித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கை பொறுத்தவரை நீதிமன்றம் தாமதத்தை விரும்பவில்லை, ஆகவே, ஒரு நொடி கூட வீணாகக்கூடாது என்று கூறினர்.

சிபிஐ விசாரணையை தொடங்குவதற்குள் தடயங்கள் அழிக்கப்பட வாய்ப்பு உள்ளதால், சிபிஐ விசாரிக்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனையடுத்து வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும், சிபிசிஐடி டி.எஸ்.பி அனில்குமாரிடம் நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபின்பு ஒப்படைத்தார். இந்த ஆவணங்களின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் இன்று தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

malaimalar