லடாக் சென்றார் பிரதமர் மோடி: வீரர்களுடன் ஆலோசனை

லடாக்: லடாக்கின் கிழக்கு பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன வீரர்கள் தாக்குதல் நடத்தியதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில், பிரதமர் மோடி, இன்று(ஜூலை 3) லே பகுதிக்கு சென்று, அங்கு நிலவும் சூழ்நிலை குறித்து வீரர்களிடம் கேட்டறிந்தார். பிரதமருடன் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.

லடாக் எல்லையில் இந்திய – சீன வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்றம் நிலவுகிறது.. இந்நிலையில், பிரதமர் மோடி இன்று அதிகாலை லே பகுதியில் உள்ள நிமு பகுதிக்கு சென்றார். நிமு பகுதியானது, 11 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளதுடன், கடினமான நிலப்பகுதியை கொண்டது. அங்கு, ராணுவம், விமானப்படை, இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் ஆலோசனை நடத்தினார். லடாக் சென்ற பிரதமர் மோடியுடன், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே ஆகியோரும் உடன் சென்றுள்ளனர். இந்திய பகுதியில் செய்யப்பட்டுள்ள ராணுவ பாதுகாப்பு, வான்வெளி கண்காணிப்பு குறித்து பிரதமர் ஆய்வு செய்ய உள்ளார்.

தொடர்ந்து, சீன வீரர்களுடன் நடந்த மோதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்களை பிரதமர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திக்சே பகுதி செல்லும் பிரதமர் அங்கு வீரர்கள் மத்தியில் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

லடாக் பகுதியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் இன்று ஆய்வு செய்வதாக இருந்தது. ஆனால், அந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இதனால், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் லடாக் வருவார் என அறிவிக்கப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், லடாக் வந்த ராணுவ தளபதி நரவானே, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ததுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து பேசினார்.

dinamalar