பத்மநாபசுவாமி கோவில்; மன்னர் குடும்பத்திற்கு உரிமை உண்டு: சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் பராமரிப்பில் உள்ள திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் மீது அந்த குடும்பத்திற்கு உரிமையுள்ளதாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ள ரகசியஅறைகளில் தங்கம், வைரம், வெள்ளி பொருட்கள் அடங்கிய பொக்கிஷங்கள் வெளி உலகுக்கு தெரிய வந்தது.இக்கோயிலை, திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் நிர்வகித்து வருகின்றனர். “திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் பராமரிப்பில் உள்ள சொத்துக்கள், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை இல்லாததால், சொத்துக்களை அரசு நிர்வகிக்க வேண்டும். கோவிலின் ரகசிய அறைகளைத் திறந்து ஆய்வு செய்ய வேண்டும்’ என, சுந்தரராஜன் என்பவர், கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட், கோவிலை அரசு நிர்வகிக்க வேண்டும் என 2011-ல் தீர்ப்பளித்தது.

தீர்ப்பை எதிர்த்து, திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கேரள ஐகோர்ட் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்தது. அதேநேரம், கோவிலில் உள்ள ரகசிய அறைகளைத் திறக்க உத்தரவிட்டது. இந்த வழக்கு கடந்தாண்டு ஏப்ரலில் மீண்டும் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளித்த சுப்ரீம் கோர்ட், பத்மநாபசுவாமி கோவிலின் மீது மன்னர் குடும்பத்திற்கு உரிமை உள்ளது. கோவில் நிர்வாகத்தை மேற்பார்வையிட, மாவட்ட நீதிபதியின் கீழ் இடைக்கால குழு அமைக்கலாம். குழுவில் இடம்பெறுபவர்கள் அனைவரும் ஹிந்துக்களாக இருக்க வேண்டும். கருவூலத்தை திறப்பது தொடர்பாக குழுவே முடிவு செய்யும் இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

dinamalar