ஜெயக்குமார் தேவராஜ் | பொதுவாகவே, தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டுமென தனிநபர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். அரசியல் இயக்கங்களும் அவ்வாறே – சிறப்பாகச் செயல்பட விரும்பினால், அவர்களும் முன்னோக்கிச் செல்ல வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, ஷெராட்டன் நகர்வுக்குப் பின்னர், பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) ஆதரவாளர்களுடன் நான் நடத்திய பல விவாதங்களில், அவர்களிடையே ஒரு தொலைநோக்குச் சிந்தனை வளர்ச்சியை நான் காணவில்லை.
பி.எச்.-க்கு, மலாய்க்காரர்களின் ஆதரவு குறைந்து வருவது ஏன் என்பதைப் புரிந்துகொள்வதில் மலாய்க்காரர் அல்லாத ஆதரவாளர்கள் சிரமப்படுகின்றனர். அதேசமயம், மலாய்க்காரர்களில் பலர் உற்சாகம் அடைந்துள்ளனர் – தங்கள் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த ஊழல் பெருட்சாளிகளை மலாய்க்காரர்கள் மீண்டும் எவ்வாறு ஏற்றுக்கொள்கின்றனர்? அம்னோ-பாஸ் பிரச்சாரத்தால் மலாய்க்காரர்கள் கவரப்பட்டுவிட்டார்களா? அம்னோ உயரடுக்கினர் தங்களை மட்டும் வளப்படுத்திக் கொண்டிருப்பதை இவர்களால் பார்க்க முடியவில்லையா? இப்படியாக, இன்னும் பல….
இவற்றையெல்லாம் தெளிவுபடுத்தக்கூடிய ஒரு பகுப்பாய்வை நான் பரிந்துரைக்க விரும்புகிறேன்.
1957-ம் ஆண்டின் கூட்டாட்சி அரசியலமைப்பில், மலாய் தீவுக்கூட்டத்தின் ஒரு பகுதியான “நுசாந்தார மெலாயு” (மலாய் தீவுக்கூட்டம்) என்ற “தானா மெலாயு” (மலாய் மண்) என்றக் கதையை அடிப்படையாகக் கொண்ட ஒருமித்த கருத்து ஒன்று இருந்தது. இந்தக் கருத்தின் அடிப்படையில், மலாய் மொழியைத் தேசிய மொழியாகவும், இஸ்லாத்தைக் “கூட்டமைப்பின் மதம்”-ஆகவும் (இது ஓரளவு தெளிவற்றது), மலாய்க்காரர்களுக்கு நிலையான சிறப்பு சலுகைகள் 153-வது பிரிவின்படி இணைக்கப்பட்டு, அரசியல் அமைப்பில் சுல்தான்களுக்கு நிறைவேற்று அதிகாரத்தில் குறிப்பிடத்தக்க குறைப்பு இருந்தாலும் காலனித்துவத்திற்கு முந்தைய அமைப்பு தொடரப்படும் எனக் கூறப்பட்டது.
அதேநேரத்தில், மலாய்க்காரர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு, மலாய்க்காரர் அல்லாதவர்களின் பங்களிப்பின் தேவையை இந்த அமைப்புமுறையானது அங்கீகரிக்கிறது. இவ்வாறு மத்திய அரசியலமைப்பு மலாய்க்காரர்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமைக்கான உரிமையையும் தங்கள் தாய்மொழிகளைப் பயன்படுத்துவதற்கும், வளர்ப்பதற்கும், தங்கள் மதங்களைக் கடைப்பிடிப்பதற்கும், நாட்டின் சட்டவிதிகளின் கீழ் சமமான பாதுகாப்பை அனுபவிப்பதற்கும் உரிமை அளித்தது. தற்செயலாக, 1947-ம் ஆண்டில் ஏ.எம்.சி.ஜெ.ஏ – புத்ரா கூட்டணியால் வகுக்கப்பட்ட மக்கள் அரசியலமைப்பின் பல விதிகளிலும் மலாய் தீவுக்கூட்டத்தின் விவரிப்பு பிரதிபலிக்கிறது.
1963-ம் ஆண்டில், பிஏபி “மலேசியர்களின் மலேசியா” என்ற மாற்று விவரிப்புடன் வந்தது. இது மிகவும் அருமையாக இருந்தது – நாம் அனைவரும் மலேசியர்கள், எனவே ஓர் இணக்கமான தேசத்தை உருவாக்க ஒன்றாக வேலை செய்யவேண்டும். ஆனால், பிஏபி விவரிப்பின் உட்பிரிவு பின்வருவனவற்றை உள்ளடக்கியது – நாம் அனைவரும் குடியேறியவர்கள், இதில் மலாய்க்காரர்களும் அடங்குவர், காரணம், அவர்களில் பெரும்பாலோர் ஜாவா, சுமத்திரா, சுலாவேசி மற்றும் இன்னும் பல நாடுகளில் (இந்தியா மற்றும் மத்தியக் கிழக்கு) இருந்து வந்தவர்கள். எனவே, அனைத்து மலேசியக் குடிமக்களும் எல்லா வகையிலும் சமமாக இருக்க வேண்டும் – சீன மற்றும் தமிழ்மொழி அதிகாரப்பூர்வ மொழிகளாக, மலாய் மொழிக்கு இணையாக இருக்க வேண்டும், மேலும் அனைத்து மதங்களும் சமமாகக் கருதப்பட வேண்டும். அரசுக்கும் மதத்திற்கும் இடையில் கடுமையானப் பிரிவினை இருக்க வேண்டும், மேலும் ‘சிறப்பு சலுகைகள்’ கொள்கையை விரைவாக தகுதி அடிப்படையிலான ஓர் அமைப்பாக மாற்ற வேண்டும், இதன்வழி நாடு மிகவும் திறமையாகவும் விரைவாகவும் வளர முடியும்.
1963 முதல் 1965-ம் ஆண்டு வரையிலான அம்னோ தலைவர்கள், நுசாந்தரா மெலாயு கதைகளிலிருந்து வேறுபட்டிருந்த பிஏபி கதையை ஏற்றுக்கொள்ள சிரமப்பட்டனர், சிங்கப்பூரைக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறும்படி கேட்டுக்கொண்டனர் (இதனை லீ குவான் யூ உண்மையில் விரும்பியிருக்கலாம்!). ஆனால், பிஏபி-யின் கொள்கைகள் மலாய் அல்லாத சமூகங்களுக்கிடையே டிஏபி கட்சியால் பிரச்சாரம் செய்யப்பட்டு, உயிரூட்டப்பட்டது. இச்செயலானது, முற்போக்கான கருத்துக்களைக் கொண்ட பலர் உட்பட, மலாய் தேசியவாதிகளுக்கு இன்றும் ஒரு வெறுப்பாகவே உள்ளது.
முஹிட்டின் யாசின்!?
பிப்ரவரி 2020-ன் பிற்பகுதியில், பெர்சத்து கட்சியைப் பி.எச். கூட்டணியில் இருந்து வெளியேற்ற முஹிட்டின் யாசின் எடுத்த முடிவை விளக்குவது, ஆரம்பத்தில் எனக்குக் கடினமாக இருந்தது. 5 ஆண்டுகளுக்கு முன்பு (28 ஜூலை 2015) நஜிப் ரசாக் அவர்களால் துணைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அதன் காரணமாக நஜிப்பையும் அம்னோவையும் வீழ்த்த தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஒருவர் இங்கே இருந்தார்.
ஆனால், ஊழல் நிறைந்த, அதே அம்னோ கூட்டணிக்கு மீண்டும் அதிகாரத்தைத் தாரைவார்த்துக் கொடுக்க இன்று அவரே தயாராக இருக்கிறார். அவரின் எதிர்ப்பாளர்கள், இது அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற அவருக்கு உண்டான ஆசை என்று கூறியுள்ளனர் – பிரதமர் அலுவலகத்தில் அபரிமிதமான சக்தி குவிந்துள்ளது, மேலும் அதிகாரத்தின் மீதிருக்கும் ஆசையைக் கட்டுப்படுத்துவது கடினம், அதுவும் அது குறிப்பிடத்தக்க தூரத்திற்குள் இருந்தால் எதிர்ப்பது மிக மிகக் கடினம்.
ஆனால், இதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ‘முதலில் அவர் ஒரு மலேசியர்’ , என்று லிம் கிட் சியாங் முஹிட்டினுக்குச் சவால் விடுத்தபோது, முஹிட்டின் அளித்த பதில் நினைவில் இருக்கிறதா?
“முதலில், நான் ஒரு மலாய்க்காரர், நான் அப்படி சொல்ல விரும்புவதால், நான் மலேசியாவின் குடிமகன் அல்ல என்று நீங்கள் அர்த்தம் கொள்ளக்கூடாது,” என்று முஹிட்டின் செய்தியாளர்களிடம் கூறினார்.
2015-ம் ஆண்டு முதல், அம்னோவுடன் முஹிட்டினுக்குத் தகராறு ஏற்பட, அம்னோ தலைவர்கள் இடையில் மலிந்துகிடந்த ஊழலே காரணம். மலாய் தீவுக்கூட்டம் தொடர்பான எந்தக் கருத்து வேறுபாட்டின் காரணமாகவும் அவர் வாதிடவில்லை. ‘மலேசியர்களின் மலேசியா’ எனும் கோட்பாடு, முஹிட்டினுக்கும் பி.எச்.-இல் இருக்கும் பிற மலாய்த் தலைவர்களுக்கும் சங்கடம் அளிக்கிறதா?
பல பி.எச். ஆதரவாளர்கள் இதை அறிந்திருக்கவில்லை – 2018 ஜூன் மாதம், 70,000 மீனவர்களின் மாதாந்திரக் கொடுப்பனவு (எலவன்ஸ்) RM 300-ஐ, பி.எச். அரசாங்கம் இரத்து செய்தது. அதே ஆண்டில், இரப்பரின் விலை கிலோகிராமுக்கு RM 2.20-ஆக வீழ்ச்சி அடைந்தபோது, ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரை இரப்பர் விலைக்கான மானிய திட்டமும் நிறுத்தப்பட்டது. இரப்பர் விலை RM 2.20-க்கும் கீழ் வீழ்ச்சிகாணும்போது, ஐந்து ஏக்கருக்கும் கீழ் இரப்பர் உற்பத்தி நிலம் கொண்டிருப்போருக்கு இத்திட்டம் உதவும். இதன்வழி, 180,000 இரப்பர் சிறு தொழில்முனைவோர் தங்களைத் தற்காத்து கொண்டனர்.
இந்த இரண்டு திட்டங்களும் நிறுத்தப்பட்டதற்கு, அரசாங்கத்திடம் போதுமான பணம் இல்லை என்று காரணம் கூறப்பட்டது. இருப்பினும், அதே நேரத்தில், பெட்ரோனாசின், 30 பில்லியன் டாலர் சிறப்பு ஈவுத்தொகையைக் கொண்டு, கிட்டத்தட்ட 37 பில்லியன் டாலர் ஜிஎஸ்டி மற்றும் வருமான வரியை அரசாங்கம் திருப்பிச் செலுத்தியது. ஆமாம், கடனைத் திருப்பிச் செலுத்துவது ஒரு நல்ல விஷயந்தான், ஆனால் 20 விழுக்காடு மலாய் பி20 குழுவினருக்குக் கிடைத்துவந்த உதவித்தொகையை நிறுத்துவது எந்த வகையில் நியாயம்? இது விவேகமான செயலா? பி20 மலாய்க்காரர்களுக்கு இந்த உதவிதொகை நிறுத்தப்பட்டதை அரசு ஊழியர்கள் அறிந்திருக்கமாட்டார்கள் என்று பி.எச். நம்புகிறதா?
அதன்பிறகு, தமிழகத்தைச் சேர்ந்த இராஜேந்திர சோழன் I, சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு, கெடாவில் ஒரு நகரத்தை எவ்வாறு கட்டினார் என்பது பற்றி பேசிய ஒரு டிஏபி தலைவரின் (2018-ல் பதிவு செய்யப்பட்டது) வீடியோ பரவலாக்கப்பட்டது. இது உண்மை, ஆனால் ஓராங் அஸ்லியைத் தவிர நாம் அனைவரும் குடியேறியவர்களே என ‘மலேசியர்களின் மலேசியா’ கதைக்கு ஆதரவளிக்க, இந்த வீடியோ மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
புதிய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்ற வதந்திகளும் பரவி வந்தன. 1மலேசியா உதவித்தொகை (பி.ரி.ம்.), வாழ்க்கைச் செலவின உதவிதொகையாக (பி.எஸ்.எச்.) பெயர் மாற்றம் கண்டபோது, தனிநபர் மற்றும் தனித்துவாழும் தாய்மார்களுக்கான பண உதவி நிறுத்தப்பட்டது. ‘மலாய்க்காரர்கள் சோம்பேறிகள்’ என்று முன்னாள் பிரதமர் கூறினார், மோசமான அறிக்கைகளும் திட்டங்களும் தொடர்ந்தன.
இதுபோன்ற சம்பவங்களும் திட்டங்களும் பி.எச். ஆதரவாளர்கள் உட்பட, மலாய் கல்விமான்கள் மத்தியிலும் சங்கடத்தை ஏற்படுத்தியது. பி.எச். கூட்டணிக்கு, 2018 பொதுத் தேர்தலின் போது, 25 விழுக்காடாக இருந்த மலாய்க்காரர்களின் ஆதரவு, 2019-ம் ஆண்டு இறுதியில், சுமார் 17 விழுக்காடாக வீழ்ச்சியடைந்தது. சாதாரண மலாய்க்காரர்கள் பாஸ்-அம்னோ பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டனர் என பி.எச். கூறியது, ஆனால் அது அரைவேக்காடு பகுப்பாய்வு.
பி.எச்.-இன் பிழையான செயல்பாடுகள், அம்னோ பிரச்சாரக் குழுக்களுக்கு நேரடி வெடிமருந்துகளாக ஆனதை என்ன சொல்வது? ‘மலேசியர்களின் மலேசியா’ விவாதத்தையும் ‘மலாய்த் தீவுகூட்டம்’ கதையையும் ஏற்கச் செய்ய முடியாத பி.எச்.-இன் இயலாமையை என்ன சொல்வது? மலேசிய மண்ணிற்கு இரு மாறுபட்ட கதைகள் உள்ளன என்ற உண்மையை பி.எச்.-இல் உள்ள பலர் (இன்னும்) அறியாமலேயே உள்ளனர்.
அன்வரால் சிறப்பாக செய்ய முடியுமா?
என்னைப் பொறுத்த வரையில், ஆம்!
1998-ல், பதவி நீக்கம் செய்யப்பட்டதிலிருந்து, மலாய்க்காரர்களைப் பாதுகாப்பதிலும் மலாய்க்காரர்கள் போதுமானவற்றைப் பெறவில்லை என்பதை அம்னோவிடம் வெளிப்படுத்துவதிலும் அன்வார் இனவெறியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தார். மாறாக, அவர் நல்லாட்சியில் கவனம் செலுத்தினார், பி.என். உயரடுக்குகள் செய்யும் ஊழல்களை நிறுத்தி, அதன்வழி தேவைப்படும் ஏழைகளுக்கு அரசாங்கம் உதவ முடியும் என்றார். மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கும் நீதி மற்றும் சமபங்கு உயர்வு போன்ற இஸ்லாமியக் கொள்கைகளுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் மீண்டும் மீண்டும் கூறினார். அம்னோ உயரடுக்கினரால் நாட்டின் செல்வம் கொள்ளையடிக்கப்படுவதை நிறுத்தவும் அவர் விரும்புகிறார்.
மலாய்க்காரர் அல்லாதவர்கள், அனைத்து இனத்தவரையும் உள்ளடக்கிய இந்த அணுகுமுறையை விரும்புகிறார்கள். மலாய் இனத் தொழிலாளர்களும் குறைந்த வருமானத்திம் தாங்கள் அதிக வாழ்க்கைச் செலவினங்களுடன் போராடுவதையும், அம்னோ உயரடுக்குகள் ஆடம்பர வாழ்க்கை முறையை அனுபவிப்பதையும் அறிந்துள்ளனர்.
அன்வாரின் அணுகுமுறை புதியப் பொருளாதாரக் கொள்கையின் தவறுகளைச் சரிசெய்யக்கூடும் – மலாய் தீவுக்கூட்டக் கதைக்குச் சவால்விடாமல், மலாய்க்காரர் அல்லாத ஏழைகள் புறக்கணிக்கப்படுவதையும் அம்னோ உயரடுக்குகள் மானியங்களை தவறாகப் பயன்படுத்துவதையும் தவிர்க்க முடியும். பெரும்பான்மை மலாய்க்காரர்கள் ஒதுக்கப்படாத நிலையில், இத்திட்டம் அரசியல் ரீதியில் நீடித்து நிற்கும். அதுமட்டுமின்றி, இதன்வழி நாட்டைச் சிறந்த திசையில் நகர்த்தவும் கூடும்.
துரதிர்ஷ்டவசமாக, இந்த வாய்ப்பு ஏற்கனவே புதைக்கப்பட்டிருக்கலாம். மலாய்க்காரர்கள் மட்டுமின்றி, மலாய்க்காரர் அல்லாதாரின் ஆதரவும் வியக்கத்தக்க வகையில் சரிந்துள்ளது. ‘மலேசியர்களின் மலேசியா’ எனும் டிஏபி உறுதியளித்த கொள்கை விரைந்து நிறைவேற்றப்படுவது கடினம் என்பதைப் புரிந்துகொள்ள பி.எச். ஆதரவாளர்கள் சிரமப்படுகின்றனர்.
கடந்த 50 ஆண்டுகளில் டிஏபி-இன் அரசியல் பிரச்சாரத்தின் விளைவால் அவர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துவிட்டன. டிஏபி எதிர்க்கட்சியாக இருக்கும் வரை, பிஏபி கொள்கையின் அடிப்படையில் நம்பத்தகாத கோரிக்கைகளை டிஏபி முன்வைத்து கொண்டிருந்தது. ஆனால், அரசாங்கமாக மாறும்போது, முரண்பாடான கொள்கைகளும் அவை வழிநடத்தப்பட வேண்டும் எனும் கோரிக்கையும், அவர்களின் முடிவுகளைப் பாதிக்கிறது. அவர்களின் ஆதரவாளர்கள் அதை அலட்சியமாகப் பார்த்து கோபப்படுகிறார்கள்.
கனவாகிப்போன ‘ரிஃபோர்மாசி’!
நிலைமை இப்போது பி.எச். கூட்டணிக்குச் சாதகமாக இல்லை. இவ்வாண்டில் தேர்தல் வந்தால், தற்போது கைவசமிருக்கும் நாற்காலிகளில், மூன்றில் ஒரு பங்கைப் பி.எச். இழக்க நேரிடலாம்.
ஆனால், நகர்ப்புற இடப்பெயர்வுக்கு வழிவகுத்த சமூக மற்றும் பொருளாதாரப் பெரும் திட்டங்களையும், மலாய் சமூகத்தில் குறைந்தபட்ச ஊதியம் பெறுபவர்களையும் அரசியல் ரீதியாக இணைக்கப்பட்ட உயரடுக்குப் பணக்காரர்களான ஒரு சிறு குழுவினரையும் சீர்திருத்தக் கொள்கைகளை ஆதரித்த நாம் புரிந்துகொள்ள வேண்டும். இவை இன்னும் தொடர்கின்ற பட்சத்தில், வளர்ந்து வரும் நகர்ப்புற வறுமை மற்றும் மலாய் உயர்வர்க்கத்தின் ஊழல் மற்றும் ஆடம்பர நுகர்வு ஆகியவற்றைப் பெரிகாத்தான் நேஷனல் உயரடுக்கு கையாளவில்லை என்றால், ‘ரீஃபோர்மாசி II’-க்கான சமூகப்-பொருளாதார அடித்தளம் உருவாக்கப்படும்.
‘ரீஃபோர்மாசி II’ இயக்கத்தின் தலைவர்கள், அரசியல் ரீதியாகக் கூர்மையாக இருப்பார்கள் என்று நம்புவோம். மலேசிய மண்ணின் குணாதிசயங்கள் தொடர்பான பல்வேறு கதைகளின் விளைவாக ஏற்படும் பதட்டங்கள் குறித்தும், அதை எவ்வாறு நிர்வகிப்பது என்பதையும் அவர்கள் அறிந்திருக்க வேண்டும் (பிஏபி கதைகளை ஓரந்தள்ளி, அன்வாரின் அணுகுமுறையைப் பின்பற்றலாம்).
ரிஃபோர்மாசி II-இன் தலைவர்கள் உணவு இறையாண்மை, புலம்பெயர்ந்தத் தொழிலாளர், காலநிலை மாற்றம், அரசியல் நிதி, சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்கள், கழிவுப் பொருள்கள் மேலாண்மை மற்றும் நாடு எதிர்கொள்ளும் இன்னும் பல முக்கியப் பிரச்சினைகளில், தேசிய ஒருமித்த கருத்தை எட்ட, பல்லினக் குழுக்களோடு கலந்துபேச நேரம் ஒதுக்க வேண்டும்,
2018-ல் ‘சீர்திருத்தவாதிகள்’நாட்டைக் கைப்பற்றத் தயாராக இல்லை. ஒவ்வொரு அமைச்சரும் நாட்டின் மேம்பாட்டிற்காக விவாதிக்கவும் ஒரு திடமான திட்டத்தை வகுக்கவும் வாய்ப்பின்றி இருந்தனர்.
இம்முறை நாம் சிறப்பாக செய்ய வேண்டும்! இந்த வாய்ப்பு நாம் கற்பனை செய்ததை விட விரைவில் வரக்கூடும். எனவே, நாம் தயாராக இருக்க வேண்டும்.
டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் தேவராஜ், மலேசிய சோசலிசக் கட்சியின் தேசியத் தலைவர்.