முதல்-மந்திரி வீட்டுக்கு குடும்பத்துடன் வந்த கொரோனா நோயாளி

பெங்களூருவில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்காததால் முதல்-மந்திரி வீட்டுக்கு கொரோனா பாதித்த நோயாளி குடும்பத்துடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை உடனடியாக போலீசார் ஆம்புலன்சில் ஏற்றி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

பெங்களூரு: பெங்களூரு கொரோனா நோயாளிகளை படுக்கை வசதி இல்லை என்று கூறி ஆஸ்பத்திரியில் அனுமதிக்காமல் இருக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பெங்களூரு பனசங்கரி அருகே அம்பேத்கர் நகரில் வசிக்கும் ஒரு நபருக்கும், அவரது மனைவி, 2 குழந்தைகளுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து, அந்த நபர் தனது மனைவி, குழந்தைகளை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் அங்கு படுக்கை வசதி இல்லை என்று கூறி வேறு ஆஸ்பத்திரிக்கு செல்லும்படி கூறி விட்டனர்.

மேலும் ஆம்புலன்சில் தங்களை வேறு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும்படி மாநகராட்சிக்கு அந்த நபர் தகவல் தெரிவித்து உள்ளார். ஆனால் ஆம்புலன்ஸ் வரவே இல்லை. இதன் காரணமாக அந்த நபர் தனது குடும்பத்துடன் வீட்டிலேயே பரிதவித்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று மதியம் அந்த நபர் தனது மனைவி, 2 குழந்தைகளை அழைத்து கொண்டு முதல்-மந்திரி எடியூரப்பாவின் காவேரி இல்லத்திற்கு வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரிடம், தங்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், ஆஸ்பத்திரியில் அனுமதிக்க மறுக்கின்றனர், ஆம்புலன்ஸ் வரவில்லை என்றும் கூறியுள்ளார். இதை கேட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். அந்த நபருக்கு கொரோனா இருப்பதால், அவருக்கு அருகில் போலீசார் யாரும் செல்லவில்லை.

முதல்-மந்திரி வீட்டுக்கு எதிரே உள்ள சாலையில் அந்த நபர் தனது மனைவி, குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்தார். உடனே சுதாரித்து கொண்ட போலீசார் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். சுமார் 35 நிமிடங்கள் கழித்து 2 ஆம்புலன்ஸ்கள் அங்கு வந்தன. பின்னர் அந்த நபர், அவரது மனைவி, 2 குழந்தைகளையும் ஆம்புலன்சில் ஏற்றி மல்லேசுவரத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சுகாதாரத்துறை ஊழியர்கள் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் முதல்-மந்திரி எடியூரப்பா வீட்டு முன்பு நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

malaimalar