கட்சிகள் கட்டாய வசூல்: கதறும் தொழில் நிறுவனங்கள்

சட்டசபை தேர்தலை காரணம் காட்டி, தொழிற்சாலைகளில், அரசியல்வாதிகளின் உத்தரவுப்படி, அதிகாரிகள் கட்டாய வசூலில் ஈடுபடுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில், புதிய தொழிற்சாலைகள் வர, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் மாசு தன்மைக்கேற்ப, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, வெள்ளை என, நான்கு வகைகளாக, அவை பிரிக்கப்பட்டுள்ளன.

அதாவது, அதிக மாசு ஏற்படுத்துபவை, சிவப்பு; மிதமாக மாசு ஏற்படுத்துபவை, ஆரஞ்சு; குறைந்த அளவில் மாசு ஏற்படுத்துபவை, பச்சை; மாசு ஏற்படுத்தாதவை, வெள்ளை என, வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

நிதி வழங்குங்கள்

இது தவிர, 10 கோடி ரூபாய்க்கு மேல், சொத்து மதிப்பு உள்ள தொழிற்சாலைகள், பெரிய வகை; 5 – 10 கோடி ரூபாய்க்குள் சொத்து மதிப்பு உள்ள தொழிற்சாலைகள், நடுத்தர வகை; 5 கோடி ரூபாய்க்கும் குறைவான, சொத்து மதிப்பு உள்ள தொழிற்சாலைகள், சிறிய வகை என்றும், வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

சர்க்கரை ஆலை, சிமென்ட் ஆலை, மதுபான ஆலை, பெட்ரோ கெமிக்கல் ஆலை, காகித ஆலை, உர ஆலை, பூச்சி மருந்து தயாரிப்பு ஆலை உட்பட, 17 வகையான பொருட்களை தயாரிக்கும் ஆலைகள், அதிக மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளாக உள்ளன.தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்கள், ஒவ்வொரு வகை தொழிற்சாலைகளையும், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்து அறிக்கை அளிப்பர்.

இது தவிர, ஆலைகள் நிறுவவும், இயக்கவும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அனுமதி வழங்கப்படுகிறது. சுற்றுச்சூழல் அனுமதி, மார்ச் மாதம் நிறைவடைந்த தொழிற்சாலைகள், கொரோனா காரணமாக, அனுமதியை புதுப்பிக்க, செப்., 30 வரை, அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், கொரோனா தடுப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைக்காக, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, தாராளமாக நிதி வழங்குங்கள் என, அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அரசு உதவி தேவை என்பதால், தொழில் நிறுவனங்கள், தங்களின் வசதிக்கேற்ப, நிவாரண நிதி வழங்கின.

புகார் அளிக்கலாம்

தமிழக சட்டசபை தேர்தலுக்கு, எட்டு மாதங்களே உள்ளதால், தேர்தல் நிதி வசூலை, அரசியல் கட்சிகள் துவக்கி உள்ளன. ஆளும் கட்சி சார்பிலும், பல்வேறு வகையில் வசூல் நடக்கிறது. அந்த வகையில், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வழியாக, தனி வசூல் நடத்தப்படுகிறது. சுற்றுச்சூழல் அனுமதி வேண்டும் என்றால், குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும் என, அதிகாரிகள் வற்புறுத்துவதாக, தொழில் துறையினர் புகார் வாசிக்கின்றனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக, தொழில் நிறுவனங்கள், நான்கு மாதங்களாக மூடப்பட்ட நிலையில், தற்போது தான் செயல்படத் துவங்கி உள்ளன.ஏற்கனவே தொழில் முடக்கத்தால், தடுமாறும் தொழில் துறையினர், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் நெருக்கடியால், கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர். இதுபோன்ற வசூலை தடுத்து நிறுத்த வேண்டும் என, அரசுக்கு வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: சுற்றுச்சூழல் அனுமதியை புதுப்பிக்க, செப்டம்பர், 30 வரை தரப்பட்டுள்ளது. இதனால், நிறுவனங்கள், சிரமமின்றி விண்ணப்பித்து வருகின்றன. நிறுவனங்களிடம், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், லஞ்சம் பெறுவதாக புகார்கள், இதுவரை வரவில்லை. அதுபோன்று இருந்தால், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவரின் அலுவலகத்திற்கு, தபால் வாயிலாகவோ, நேரடியாக வோ, ஆதாரங்களுடன் புகார் மனுவை அளிக்கலாம்.சம்பந்தப்பட்டவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

நடவடிக்கை எடுக்குமா அரசு?

சுற்றுச்சூழல் அனுமதியை புதுப்பிக்க தாமதமாகும் தொழிற்சாலைகளுக்கு, பல்வேறு நெருக்கடிகளை, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கொடுப்பதாக, தொழில் நிறுவனங்கள் புகார் தெரிவிக்கின்றன.

இந்நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுவதாவது: தொழிற்சாலைகள் இயங்குவதற்கான அனுமதியை, குறிப்பிட்ட ஆண்டுக்கு, ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். இதற்கு குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டும். அனுமதி வழங்குவதற்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்திருந்தால், முன் ஆய்வு செய்யப்படாமல், சுய சான்றிதழ் அடிப்படையில், அனுமதி வழங்கப்படும். மேலும், தொழிற்சாலைகளின் அளவைப் பொறுத்து, ஆய்வு மற்றும் கழிவு நீர் மாதிரி சேகரிப்பதற்கான கால அளவு மாறுபடும்.

தற்போதைய கொரோனா கால கட்டத்தில், தொழிற்சாலைகள், நான்கு மாதங்கள் செயல்படாமல் உள்ளன; பணியாளர்கள் யாரும் வேலைக்கு வரவில்லை. இந்த நிலையில், தொழிற்சாலை உரிமம் புதுப்பித்தல், ஆய்வு மேற்கொள்ளுதல் போன்ற பணிகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.

மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சிலர், தொழிற்சாலைகளுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுக்கின்றனர். கொரோனாவால் தொழில் பாதிக்கப்பட்டு, பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும், இந்த சூழலில், அதிகாரிகளின் தொந்தரவு, மிகுந்த கவலை அளிக்கிறது. இதைத் தடுக்க, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

-நமது நிருபர் –

dinamalar