காக்டெய்ல்

சோழர் காலத்து ஐம்பொன் முருகன் சிலை அரசு அருங்காட்சியகத்தில் இருந்து காணாமல் போகிறது. மைம் கோபி இந்த சிலையை திருடி வைத்திருக்கிறார். சில தினங்களுக்கு பிறகு போலீஸ் அதை கண்டுபிடித்ததாக சொல்கிறார்கள். ஆனால் அது உண்மையான சிலை கிடையாது. இவ்வாறு செய்தி வெளியிட்டால், காணாமல் போன சிலை ஏதாவது ஒரு வகையில் கிடைக்கும் என திட்டமிட்டு போலீஸ் இவ்வாறு செய்கின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, சென்னையில் சலூன் கடை வைத்திருக்கும் யோகிபாபுவுக்கு மூன்று நண்பர்கள் உள்ளனர். அதில் அன்பு என்பவருக்கு திருமணம் நிச்சயமாகிறது. இதற்காக யோகிபாபு உள்ளிட்ட நண்பர்களுக்கு, அன்பு, வீட்டில் பார்ட்டி கொடுக்கிறார். அப்போது, அவர்கள் அனைவரும் என்ன நடந்தது என தெரியாத அளவுக்கு குடிக்கின்றனர். மறுநாள் எழுந்து பார்த்தால் அங்கு ஒரு பெண் இறந்த நிலையில் கிடக்கிறார்.

இதைப்பார்த்து ஷாக்கான யோகிபாபுவும் அவரது நண்பர்களும், அந்த பிணத்தை மறைக்க திட்டமிடுகின்றனர். பின்னர் அந்த பெண் யார்?, அவர் எப்படி இங்கே வந்தார்?, அவரை யார் கொன்றது?, முருகன் சிலை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

காமெடி வேடங்களில் கலக்கி வந்த யோகிபாபு, இந்த படத்தில் கொஞ்சம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறார். இவரது டைமிங் காமெடி ரசிக்க வைத்தாலும் சில இடங்களில் மொக்கை காமெடி எடுபடவில்லை. நாயகி ராஷ்மி கோபிநாத் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். மற்ற கதாபாத்திரங்கள் ஆங்காங்கே சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி பிரபலங்களை பயன்படுத்தியது நல்ல ஐடியா. இவர்கள் இருப்பதால் தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்ப்பது போன்று உணர்வு வராமல் இருப்பதற்காக இயக்குனர் மெனக்கெட்டிருக்கிறார்.

காமெடியை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கும் இயக்குனர் விஜய முருகன், திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். கதாபாத்திர தேர்வு, அவர்களை கையாண்ட விதம் ஆகியவற்றை பாராட்டலாம். சாய் பாஸ்கரின் இசையில் பாடல்கள் மனதில் பதியவில்லை. ரவீனின் ஒளிப்பதிவு நேர்த்தியாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் ‘காக்டெய்ல்’ மைல்டான போதை.

malaimalar