84வது பிறந்த நாள்: சினிமா, அரசியலில் சாதனை படைத்த வைஜயந்திமாலா

முதன் முதலாக தனது நாட்டிய திறமையால் திரையுலகை கட்டிப்போட்ட நடிகை வைஜயந்திமாலா. தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று வெற்றி பெற்ற முதல் நடிகையும் அவர்தான். சினிமாவில் ஜெயித்தது போன்றே அரசியலும் வடநாடு வரை சென்று ஜெயித்தவர். இன்றும் நம்முடன் இருக்கும் பழம்பெரும் தமிழ் நடிகைகளில் இவரும் ஒருவர். இன்று அவருக்கு 84வது பிறந்த நாள். வைஜயந்திமாலா என்றாலே வஞ்சிக்கோட்டை வாலிபன் பட போட்டி நடன காட்சிதான் நினைவுக்கு வரும். அது பற்றிய ஒரு சிறிய பிளாஷ்பேக்

ஜெமினி ஸ்டுடியோ அதிபரும் பிரபல வெற்றிப் படங்களின் இயக்குநருமான எஸ்.எஸ்.வாசன் வைஜயந்திமாலாவின் குடும்ப நண்பர். காட்ஃபாதர் என்றே சொல்லலாம். பரதநாட்டியம் நன்றாக ஆடக்கூடிய திறமை பெற்ற இரு நடிகைகளிடையே நடக்கும் ஜுகல்பந்தி’ மாதிரி காட்சியை, அதுவரை எந்தப் படத்திலும் வராத மாதிரி எடுக்கவேண்டும் என்பது வாசனின் ஐடியா. அந்த நடனப் போட்டிக் காட்சியை பிரபல டான்ஸ் மாஸ்டர் ஹீராலால்தான் அமைத்துக் கொடுத்தார்.

வைஜயந்திமாலா நடனகாட்சியை இரண்டு நாட்கள், பத்மினி நடனமாடும் காட்சிகளை இரண்டு நாட்கள் என தனித்தனியாக படமாக்கினார்கள். பின்னர் இருவரும் சேர்ந்து நடனமாடியதை மேலும் இரண்டு நாட்கள் படமாக்கினார்கள். வைஜயந்திமாலாவுக்கும், பத்மினிக்கும் இருந்த பரத நாட்டியத் திறமையை முழுவதுமாக வெளிக்கொண்டுவர அற்புதமான வாய்ப்பாக அந்தக் காட்சி அமைந்தது.

இந்தப் படம் 1958-ம் ஆண்டு வெளிவந்து மிகப் பெரிய ஹிட்டானது. அதுபோன்ற நடனக் காட்சியை மீண்டும் எடுக்கமுடியாது என்றே தோன்றுகிறது. அப்படி ஆடுவதற்கும் இப்போது நடிகைகள் இல்லை.

dinamalar