எஸ்.பி.பி., உடல் நிலையில் மாற்றம் இல்லை: மருத்துவமனை வட்டாரம் தகவல்

சென்னை : பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலையில் நேற்று பெரியளவில் மாற்றம் இல்லை என்றாலும் உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்குகின்றன என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது.

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் 75 கொரோனா தொற்று காரணமாக சென்னை எம்.ஜி.எம். ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு ‘எக்மோ’ உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை: கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது. ‘எக்மோ’ போன்ற உயிர்காக்கும் உபகரணங்கள் அவருக்கு தேவைப்படுகிறது. செயற்கை சுவாசம் வழியாக ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது, என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

‘பிரார்த்தனை வீண்போகாது’

எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து அவரது மகன் சரண் தெரிவித்துள்ளதாவது: அப்பாவின் உடல்நிலை நேற்று (நேற்று முன்தினம்) எப்படி இருந்ததோ அப்படியே தான் இன்றும் (நேற்றும்) தொடருகிறது. இருப்பினும் இசை திரைத்துறையினர் ரசிகர்கள் என அனைவரது பிரார்த்தனை நிச்சயம் அவரை மீட்டு கொண்டு வரும். அந்த கடவுளுக்கும் மனசாட்சி உள்ளது.

இன்றைய (நேற்று) கூட்டு பிரார்த்தனை வீண்போகாது. அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தையே இல்லை; தலைவணங்குகிறேன். ஒவ்வொருவருக்கும் எங்களின் குடும்பத்தினர் சார்பில் நன்றி சொல்கிறேன். கடவுள் என் தந்தையை மீட்டுத்தருவார்.இவ்வாறு சரண் தெரிவித்துள்ளார்.

dinamalar