தாய்மொழி கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தமிழ் சீன மொழி பள்ளிகளை மூட இளைஞர் விளையாட்டுத் துறை துணை அமைச்சரும், பிரதமர் டான் ஸ்ரீ மொகிதீன் யாசினின் பெர்சத்து கட்சியின் இளைஞர் பகுதி தலைவருமான வான் அமாட் பைசால் தெரிவித்துள்ள கருத்து வன்மையாகக் கண்டிக்கத் தக்கது என்றார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
மலாய்க்காரர்கள் உரிமைகள் மீது எவரும் கேள்வி எழுப்புவதை அரசாங்கம் அனுமதிப்பது இல்லை. ஆனால், மலாய்க்காரத் தலைவர்கள் தமிழ் சீன மொழிகள் மீதும், இஸ்லாம் அல்லாதவர்கள் சமய இடங்கள் மீதும் கைவைப்பதை எப்படி அனுமதிக்கிறது என்று கேள்வி எழுப்பினார் சேவியர்.
தேச ஒற்றுமைக்குக் குரல் எழுப்புவர்கள், முதலில் இன அடிப்படையில் அரசாங்கப் பணிகளில், கல்வியில், பொருளாதாரத்தில், வேலை வாய்ப்புகளில் காட்டப்படும் இனச் சமயப் பாகுபாடுகளைக் கலைய முன்வர வேண்டும். பெர்சத்து என்ற கட்சி இருப்பதாகக் காட்டிக்கொள்ள, சிறு பிள்ளை தனமாக, அரசியல் வான வேடிக்கை காட்டுவதாக எண்ணி நாட்டைக் கொளுத்த முற்படக்கூடாது என்றார்.
சுதந்திரத்திற்குப் பின், அரசாங்கம் மலேசிய ஆங்கில மொழி வளத்தின் மீது கை வைத்ததால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதே போன்று, நாட்டு மக்களின் பல்வேறு மொழியாகட்டும், கலை பண்பாடாகட்டும் எந்தத் தனித் திறமைகளிலும், இயற்கையான அதன் எழுச்சியில் கண்மூடித்தனமாகக் கைவைக்கக் கூடாது, அது நாட்டுக்குப் பெரிய இழப்புகளைக் கொண்டுவரும் என்ற அடிப்படை அறிவு இல்லாதவர்கள், அரசாங்கத்தில் துணை அமைச்சர்களாகவும், ஒரு அரசியல் கட்சியின் இளைஞர் பகுதி தலைவராகவும் இருப்பதற்குத் தகுதியற்றவர் என்பதை அக்கட்சி தலைவர்களே வான் அமாட் பைசாலுக்கு அறிவுறுத்த வேண்டும்.
நாட்டின் முக்கியத் தேவைகள் மற்றும் மற்ற இனங்களின் அடிப்படை மன உணர்வுகளைக் கூடப் புரிந்து கொள்ள முடியாதவர்களிடம் ஒரு பல இன நாட்டின் அரசாங்க மற்றும் அரசியல் பதவிகளை ஒப்படைப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதனை அந்தக் கட்சிக்கு உணர்த்தச் சரியான பாடங்களை மக்கள் புகட்ட வேண்டும்.
இனவாதிகள், நீதி, நேர்மை, நாணயமற்றவர்களை நாடு தலைவர்களாகக் கொண்டிருந்தால் நாட்டின் நிலை எப்படி இருக்கும் என்பதற்கு மலேசிய, உலக நாடுகளுக்கு ஒரு பரிகாசமான எடுத்த காட்டாகி வருகிறது. இந்தப் பின்னடைவைச் சரி செய்ய மக்களுக்குக் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
குறுகிய சிந்தனைகளுடைய மனிதர்களை, கட்சிகளைப் புறக்கணிக்கும் விதமாகப் போராக் சிலிம் சட்டமன்றத் தொகுதியில் மக்கள் ஆளும் பாரிசான் நேஷனல் வேட்பாளர் முகமாட் ஷைடி அஸிசை புறக்கணிக்க வேண்டும் என்றார் அவர்.