பப்ஜிக்கு தடையா? வருந்த வேண்டாம்; பாஜி விளையாட்டு வருகிறது: நடிகர் அக்ஷய் குமார்

பப்ஜிக்கு தடை என்பதற்காக வருந்த வேண்டாம், பாஜி விளையாட்டு வருகிறது என்று நடிகர் அக்ஷய் குமார் கூறியுள்ளார்.

புதுடெல்லி, லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

அதனை தொடர்ந்து இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி டிக்-டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும், பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் பல செயலிகள் தடை விதிக்கப்படும் எனவும், அது குறித்து பரிசீலித்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.

இதனிடையே சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை அடிமையாக்கி வைத்திருக்கும் பப்ஜி எனப்படும் செல்போன் விளையாட்டு செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து, பப்ஜி, பப்ஜி மொபைல் லைட், வீசாட், பைடு, ரைஸ் ஆப் கிங்டம் உள்ளிட்ட 118 செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிரடியாக தடை விதித்தது.  இதனை தொடர்ந்து கூகுளின் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ்ஸிலிருந்து பப்ஜி உள்ளிட்ட செயலிகள் நீக்கப்பட்டன.

இந்நிலையில், பப்ஜிக்கு பதிலாக அதற்கு இணையான புதிய விளையாட்டு ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது.  இந்தி திரையுலகின் பிரபல நடிகர் அக்ஷய் குமார் தலைமையில், முன்னாள் பேட்மிண்டன் விளையாட்டு வீரர் புல்லேலா கோபிசந்த் ஆகியோருடன் இணைந்து மத்திய அரசு பப்ஜிக்கு பதிலாக புதிய விளையாட்டு ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது.

இதுபற்றி நடிகர் அக்ஷய் குமார் கூறும்பொழுது, பெங்களூருவை அடிப்படையாக கொண்ட நிறுவனம் விரைவில் ஒரு புதிய பாஜி (பியர்லெஸ் அண்டு யுனைடெட்  கார்ட்ஸ்) என்ற விளையாட்டை அறிமுகம் செய்ய இருக்கிறது.

இதில் கிடைக்கும் வருவாயில் 20 சதவீதம் பாரத் கே வீர் தொண்டு அமைப்புக்கு நன்கொடையாக வழங்கப்படும் என கூறியுள்ளார்.  இந்த அமைப்பு இந்திய அரசின் மத்திய உள்விவகார அமைச்சகத்தின் கீழ் செயல்பட உள்ளது.  இதன்படி, தேச பாதுகாப்பு பணியில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக இந்த நிதி பயன்படும்.

dailythanthi