லடாக் மலை முகடுகளை ஆபரேஷன் பனி சிறுத்தை என்ற அதிரடி நடவடிக்கை மூலம் இந்தியா மீட்டெடுத்தது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுடெல்லி, லடாக் மலை முகடுகளை ஆபரேஷன் பனி சிறுத்தை என்ற அதிரடி நடவடிக்கை மூலம் இந்தியா மீட்டெடுத்தது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
கிழக்கு லடாக்கில் அசல் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், சீனா பின்வாங்கி செல்லவும், இதுவரை இருந்த நிலையை பராமரிக்கவும் மறுத்தது.
ஆனால் உயர்ந்தோங்கிய அந்த மலை முகடுகள், இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அந்த மலை முகடுகளில் இருந்து பார்த்தால், சீனாவின் நிலைகளை காண முடியும்.
எனவே அந்த மலை முகடுகளை சீனாவின் பிடியில் இருந்து மீட்டெடுத்து இந்தியாவின் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக்காட்டுவதற்கு ‘ஆபரேஷன் பனி சிறுத்தை’ என்ற பெயரில் அதிரடி திட்டம் தீட்டப்பட்டது.
ஆனாலும், சீன துருப்புகள் அங்கிருந்து வெளியேறி முகாமுக்கு திரும்பி விடும் என்று இந்திய ராணுவம் எதிர்பார்த்தது. இருப்பினும் சீனா அசைந்து கொடுக்கவில்லை.
இதையடுத்துதான் ‘ஆபரேஷன் பனி சிறுத்தை’ திட்டத்தை தீட்டி, 3 மாதங்கள் காத்திருந்த நிலையில், அதிரடி நடவடிக்கை மூலம் அதை செயல்படுத்துவதற்கு ராணுவத்துக்கு தளபதி எம்.எம்.நரவனேயும், வடக்கு பிராந்திய தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஒய்.கே.ஜோஷியும் பச்சைக்கொடி காட்டினார்கள்.
இந்த மலை முகடுகள் இந்தியாவுக்கு தந்திர உபாயமாக மட்டுமல்லாமல், தரையிலும், இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளிலும் மூலோபாய நன்மைகளை அளித்துள்ளன.
பனி சிறுத்தை ஆபரேஷனில் உயரமான மலை முகடுகளை நோக்கி செல்ல சிறப்பு படைகள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு அணியும், எந்தெந்த மலை முகடுகளை கைப்பற்றி, வினியோக சங்கிலியை வசப்படுத்துவது என்பது பட்டியலிடப்பட்டது. அதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி அந்த அணிகள் முன்னேறின.
ஒரு அதிரடி நடவடிக்கையின் மூலம், பங்கோங் சோ ஏரியின் தெற்கு மற்றும் வடக்கு கரைகளில் உள்ள நிலைகளை ராணுவம் கைப்பற்றியது. கிழக்கு லடாக்கின் பிற முக்கிய இடங்களிலும் ராணுவம் கட்டுப்பாட்டை கைப்பற்றியது. இதனால் சீனாவின் நிலைகள் மீது பருந்து பார்வை பார்க்க வழி பிறந்துள்ளது. இது சீனாவுக்கு பலத்த அடியாக அமைந்தது.
கடந்த மாத இறுதியில் இருந்து பங்கோங் சோ ஏரியின் தெற்கு கரையில் ரேசாங் லா மற்றும் ரெக்கின் லா பகுதிகளில் உள்ள முக்கிய முகடுகள் அனைத்தும் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எல்லை பேச்சுவார்த்தை வெற்றி பெறாவிட்டாலும், அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில், நிலைமையை மீட்டெடுப்பதற்கான வலு, உயரமான முக்கிய மலை முகடுகளை வசப்படுத்தியதின் மூலம் இந்திய ராணுவத்துக்கு வந்துள்ளது.
தெற்கு கரையில் உள்ள டெம்சோக்கில் மட்டுமல்லாமல், இந்திய விமானப்படையின் ஆதரவுடன் டெப்சாங் மற்றும் டி.பி.ஓ.விலும் இந்திய ராணுவம் வலுவாக அணிவகுத்து நிற்கிறது. கடந்த மாதம் 29 ந்தேதி பங்கோங் சோ ஏரியின் தென்கரையில் இந்திய பகுதியை ஆக்கிரமிக்க சீனா மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து எல்லை நிலைமை மீண்டும் பதற்றம் அடைந்திருக்கிறது. அந்த பகுதியில் முக்கிய முகடுகளை ஆக்கிரமித்து, எந்தவொரு சீன நடவடிக்கையையும் தடுக்க பிராந்தியத்தில் மோதல் பகுதிகளில் (பிங்கர் 2 மற்றும் 3 பகுதிகள்) இந்திய ராணுவம் தனது இருப்பை வலுப்படுத்தி இருக்கிறது. இந்த நடவடிக்கைக்கு சீனா ஆட்சேபம் தெரிவித்து உள்ளது. ஆனாலும் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியின் உயரமான மலைகள் அனைத்தும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருப்பது சாதகமான அறிகுறிகள் என கூறப்படுகிறது.
dailythanthi