விளைபொருளுக்கு உரிய விலையை விவசாயிகளே முடிவு செய்து எவருக்கும் விற்பனை செய்யலாம்; மத்திய வேளாண் மந்திரி

விவசாயிகள் இனி விளைபொருட்களுக்கு உரிய விலையை அவர்களே முடிவு செய்து எவருக்கும் விற்பனை செய்யலாம் என்று மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.

புதுடெல்லி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மேலவையில் 2 வேளாண் திருத்த மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டன.  இதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.  எனினும், இரண்டு மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.

இதனை தொடர்ந்து, டெல்லியில் விஜய் சவுக்கில் உள்ள மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் இல்லத்திற்கு பல்வேறு விவசாய குழுக்களை சேர்ந்த விவசாயிகள் நேரில் சென்றனர்.  அவர்கள் மந்திரிக்கு பூங்கொத்துகளை வழங்கி தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

அவர்களுக்கு வேளாண் மந்திரி தோமர் இனிப்புகளை வழங்கினார்.  இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி தோமர், நாடாளுமன்றத்தில் இன்று முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு வேளாண் திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதற்கு முன்பு விவசாயிகள் தங்களது விளைபொருட்களை நியாயமற்ற விலையில் கடைகளுக்கு விற்பனை செய்யும் கட்டாயத்தில் இருந்தனர்.

ஆனால், விவசாயிகள் இனி தங்களுடைய

விளைபொருட்களுக்கு உரிய விலையை அவர்களே முடிவு செய்து அவற்றை எவருக்கும் விற்பனை செய்து கொள்ளலாம்.  குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்ந்து இருக்கும்.  இன்றைய தினம் வரலாற்று சிறப்புமிக்க தினம் என்று கூறியுள்ளார்.

dailythanthi