இந்தியாவில் விவசாயத்துக்கு விடுதலை: வெளிநாட்டு பத்திரிகை தலையங்கம்

புதுடில்லி: மத்திய அரசின் விவசாய சட்டங்கள் மூலம் , இந்தியாவில் விவசாயத்துறைக்கு விடுதலை கிடைத்துள்ளதாக கலீஜ் டைம்ஸ் நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் பல அரசுகள், விவசாயத்துறையில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் எனக்கூறின. ஆனால், வேளாண் மசோதாக்கள் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட போது, பல்வேறு அரசியல்கட்சிகள், அமளியில் ஈடுபட்டு, பல ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த பேச்சளவில் இருந்த சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.

விளைபொருட்களுக்கு உரிய விலையை உறுதிசெய்யும் விவசாயிகள் ஒப்பந்த மசோதா, விவசாய விளைபொருள் வர்த்தக மேம்பாட்டு மசோதா ஆகியவை , இந்தியாவில் விவசாயத்துறைக்கு விடுதலை அளிப்பதுடன், விவசாயிகள் , தங்களது விளைபொருட்களை, தங்களது விருப்பத்திற்கு ஏற்பவும், எந்தநேரத்திலும் விற்பதற்கு சுதந்திரம் அளிக்கிறது. இந்த மசோதாக்கள், விவசாயிகளின் விருப்பங்களுக்கு உள்ள தடையை நீக்குவதுடன், குறிப்பிட்ட காலத்தில் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாத விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதை உறுதி செய்கிறது. மாநிலங்களில் உள்ள மண்டிகளில்தான், விவசாயிகளை தங்களது விலைபொருட்களை விற்க வேண்டிய அவசியமில்லை.

பொருட்களை இருப்பு வைக்க வேண்டிய கட்டுப்பாடுகளை நீக்கியது மட்டுமல்லாமல், இடைத்தரகர்களின் பிடியில் இருந்து விவசாயிகளுக்கு சுதந்திரம் அளித்துள்ளது. ஒரு சில நேரங்களில், விவசாய பொருட்களின் விலை 65 சதவீதம் முதல் 70 சதவீதம் அதிகரிக்கிறது. இதற்கு இடைத்தரகர்களின் தலையீடு தான் காரணம். பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டாலும், இந்த மசோதாக்கள் விவசாயிகள் மற்றும் நுகர்வோர்களுக்கு கிடைத்த வெற்றியாகும். இதற்கான பெருமை நரேந்திர மோடி அரசுக்கு தான் கிடைக்கும். இவ்வாறு அந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

dinamalar