காஷ்மீரில் டிரோன்கள் உதவியுடன் பயங்கரவாதிகள் வீசி சென்ற ஆயுதங்கள்; போலீசார் பறிமுதல்

காஷ்மீரில் டிரோன்கள் உதவியுடன் பயங்கரவாதிகள் வீசி சென்ற ஆயுதங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

ஜம்மு, எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தான் படையினரால் நடத்தப்பட்ட எல்லை மீறிய துப்பாக்கி சூடு தாக்குதலில் கடந்த 6 மாதங்களில் 10 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

ஜம்முவில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து போர்நிறுத்த ஒப்பந்த விதிமீறலில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த ஆண்டில் (மார்ச் 1 முதல் செப்டம்பர் 7 வரை) எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி தாக்குதல் நடத்திய 2,453 சம்பவங்கள் நடந்துள்ளன.

இதேபோன்று, காஷ்மீர் டி.ஜி.பி. தில்பாக் சிங் செய்தியாளர்களுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், ஜம்மு மற்றும் காஷ்மீரில் டிரோன்களை பறக்க விட்டு ஆயுதங்களை கீழே போட செய்து மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது.

அவர்கள் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.  ஆயுதங்களை டிரோன்களை கொண்டு கீழே போட செய்வது எங்களுக்கு சவாலானது.  ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகளை நாங்கள் கட்டுப்படுத்தி உள்ளோம்.  அவற்றில் சில வெற்றிகளையும் பெற்றுள்ளோம்.

பயங்கரவாத குழுக்களுக்கு அனைத்து வகையிலும் ஆதரவளித்து ஒவ்வொரு சாத்தியப்பட்ட வழியிலும் காஷ்மீரில் பயங்கரவாதத்தினை ஊக்குவிக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது.  போதை பொருட்கள் கடத்தல்காரர்களை ஒடுக்க நாங்கள் கடுமையாக போராடி வருகிறோம்.

பாகிஸ்தான் அரசு பயங்கரவாத நிதிக்கு போதை பொருட்களை பயன்படுத்துகிறது என்று கூறினார்.

இதனை நிரூபிக்கும் வகையில், காஷ்மீரின் அக்னூர் பிரிவில் எல்லை பகுதியில் இருந்து 12 கி.மீட்டர் தொலைவில், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் ஆகியவற்றை பயங்கரவாதிகள் டிரோன்கள் வழியே கீழே போட்டு சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

அவறை காஷ்மீர் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.  இதுபற்றிய முதற்கட்ட விசாரணையில் இவற்றுக்கு பின்னணியில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் இருப்பது தெரிய வந்துள்ளது என ஜம்மு சிறப்பு எஸ்.பி. ஸ்ரீதர் பாட்டீல் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்பொழுது கூறினார்.

இந்த ஆயுதங்களை காஷ்மீர் பள்ளத்தாக்கு பயங்கரவாதிகளிடம் ஒப்படைக்க இருந்ததும் தெரிய வந்துள்ளது.  இந்த ஆயுதங்களில் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் இரண்டு, 3 ஏ.கே. ரக மேகசின்கள், 90 சுற்றுகளை கொண்ட தோட்டா வெடிபொருட்கள், பிஸ்டல் ஒன்று, பிஸ்டல் மேகசின்கள் இரண்டு, 300 மீட்டர் நீளம் கொண்ட நூற்கண்டுகள் இரண்டு சுற்றுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.  இதுபற்றி இந்திய ஆயுத சட்டங்களின் கீழ் புகார் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

dailythanthi