விவசாயிகள் பேரணி
வேளாண் மசோதாக்களை கண்டித்து விவசாயிகள் இன்று நடத்தும் முழு அடைப்பு போராட்டத்தினால் பல்வேறு மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி: மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிராக நாடு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.
வேளாண் மசோதாக்களுக்கு எதிராக மூன்று நாட்கள் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக விவசாய சங்கம் (கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி) அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முதல் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் நீடிப்பதால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அக்டோபர் 1ம் தேதி முதல் காலவரம்பற்ற ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக 30க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்நிலையில், வேளாண் மசோதாக்களைக் கண்டித்து இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு (பாரத் பந்த்) பல்வேறு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யூ), அகில இந்திய விவசாயிகள் சங்கம் (ஏ.ஐ.எஃப்.யூ), அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்பு குழு (ஏ.ஐ.கே.எஸ்.சி.சி.), அகில இந்திய கிசான் மகாசங்கம் (ஏ.ஐ.கே.எம்) ஆகிய கட்சிகள் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட 18 அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அதன்படி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டம் காரணமாக சில பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது போக்குவரத்தும் பாதிக்கப்படலாம். ஓலா கேப் டிரைவர்கள் சங்கம், லாரி டிரைவர்கள் அசோசியேசன் ஆகிய சங்கங்களும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் மற்றும் ரெயில் மறியல் போராட்டம் நடத்த ஆயத்தமாகி வருகின்றனர். இதனால் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தலைநகர் டெல்லி மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில், குறிப்பாக பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் இன்றைய ஸ்டிரைக்கினால் பாதிப்பு ஏற்படலாம்.
பஞ்சாப் மாநிலத்தில் இன்றைய முழு அடைப்பு போராட்டத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வராமல் பார்த்துக்கொள்ளும்படி விவசாயிகளை முதல்வர் அமரீந்தர் சிங் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் போராட்டத்தின்போது கொரோனா கால வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்
malaimalar