ஜெனிவா: ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர்களை பாகிஸ்தான் அரசு மிருகங்கள் மற்றும் அடிமைகள் போல் நடத்துவதாகவும், அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என ஐ.நா.,வின் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடக்கும் ஐ.நா.,வின் மனித உரிமை அமைப்பில், ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த சமூக ஆர்வலர் முகமது சஜத் ராஜா பேசுகையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளவர்களை விலங்குகள் போல், பாகிஸ்தான் அரசு நடத்துகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என பொது மக்கள் சார்பில் கேட்டு கொள்கிறேன். ஆக்கிரமிப்பு காஷ்மீர் தேர்தல் சட்டம், எங்களின் அரசியல், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை பறித்துவிட்டது. சொந்த மண்ணில், அடிமைகள் போல் நடத்தப்படுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
உலக சிந்தி அமைப்பின் பொது செயலாளர் லகு லுகானா பேசியதாவது: பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புகளால், சிந்தி மக்கள் காணாமல் போவது தொடர்கதையாகியுள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும 60 பேர் கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் பயங்கரவாதத்தை பரப்பும் கருவியாக பயன்படுத்தப்படுகின்றனர்.
பாகிஸ்தான் அதிகாரிகளிடம் இருந்து ஐ.நா., அமைப்பு காப்பாற்றி, தனது கடமையை நிறைவேற்ற வேண்டும். பாகிஸ்தான் அரசை பொறுப்பாக்கி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் எனக்கூறினார்.