ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா மீது உத்தர பிரதேச போலீசார் வழக்குப்பதிவு

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் மீது உத்தர பிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதையும் உலுக்கியது.  பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் முடிவு செய்து நேற்று ஹத்ராஸ் சென்றனர்.

நொய்டா அருகே உத்தரபிரதேச எல்லையில் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் வந்தபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் வாகனங்களில் இருந்து இறங்கிய ராகுல், பிரியங்கா உள்ளிட்ட காங்கிரசார், தடையை மீறி ஹத்ராஸ் நோக்கி கால்நடையாக நடந்தே செல்ல தொடங்கினர். அவர்களுடன் ஏராளமான கட்சி தொண்டர்களும் சென்றனர்.

ஆனால் சிறிது தூரம் சென்றதும் ராகுல் மற்றும் பிரியங்கா உள்ளிட்டோரை உத்தரபிரதேச போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்புக்கு இடையே வாக்குவாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட களேபரத்தில் ராகுல் காந்தி கீழே விழுந்தார். அவரை காங்கிரஸ் தொண்டர்கள் தூக்கி விட்டனர். பின்னர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா ஆகியோரை போலீசார் கைது செய்து ஜீப்பில் ஏற்றி அழைத்து சென்றனர். பின்னர் மாலை இருவரையும் போலீசார் விடுவித்தனர்.

இந்நிலையில் ராகுல் காந்தி, பிரியங்கா, உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் 203 பேர் மீது நொய்டா போலீஸார் தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து கவுதம்புத்தா நகர் போலீஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ,

ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, உள்பட 203 காங்கிரஸ் தொண்டர்கள் மீது, இந்திய குற்றவியல் சட்டம் 188(அரசு ஊழியரை பணிசெய்யவிடாமல் தடுத்தல்), பிரிவு 269(மற்றவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகும் வகையில் நோயை பரப்புதல்), பிரிவு 270 ஆகியவற்றின் கீழ் போலீஸார் முதல்தகவல் அறிக்கையை செய்துள்ளனர். போலீஸாருக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே நடந்த தள்ளுமுள்ளுவில் சில பெண் போலீஸார் காயமடைந்தனர்.

dailythanthi