பண்டிகை காலத்தையொட்டி 200 சிறப்பு ரெயில்கள் இயக்க திட்டம் – ரெயில்வே வாரியம்

பண்டிகை காலத்தையொட்டி, மேலும் 200 சிறப்பு ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.

புதுடெல்லி,  கொரோனா பரவல் காரணமாக, கடந்த மார்ச் 22-ந் தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. தற்போது, காலவரையின்றி அவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதே சமயத்தில், கடந்த மே 12-ந் தேதி 30 ராஜதானி சிறப்பு ரெயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஜூன் 1-ந் தேதி, 200 சிறப்பு ரெயில்களும், செப்டம்பர் 12-ந் தேதி 80 சிறப்பு ரெயில்களும் ஓடத் தொடங்கின.

இதற்கிடையே, இம்மாதம் ஆயுத பூஜை தொடர்பான பண்டிகைகளும், அடுத்த மாதம் தீபாவளி பண்டிகையும் வருகின்றன. இதனால், மேலும் சிறப்பு ரெயில்களை இயக்க ரெயில்வே திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ரெயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பண்டிகை காலத்தையொட்டி, அக்டோபர் 15-ந் தேதியில் இருந்து நவம்பர் 30-ந் தேதிவரை கூடுதலாக சிறப்பு ரெயில்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். அனைத்து ரெயில்வே கோட்ட பொது மேலாளர்களையும் அழைத்து பேசியுள்ளோம்.

உள்ளூர் நிர்வாகத்துடன் பேசி, கொரோனா நிலவரத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு அவர்களிடம் கூறியுள்ளோம்.

அவர்கள் அறிக்கை அளித்த பிறகு, எத்தனை சிறப்பு ரெயில்களை இயக்குவது என்று முடிவு செய்வோம். தற்போதைக்கு மேலும் 200 சிறப்பு ரெயில்களை இயக்குவது என்று மதிப்பிட்டுள்ளோம். இது, வெறும் மதிப்பீடுதான். இந்த எண்ணிக்கை உயரக்கூடும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா நிலவரத்தை ஆய்வு செய்வதுடன், மாநில அரசின் தேவையை அறிந்து அதற்கேற்ப ரெயில்களை இயக்குவோம்.

காத்திருப்போர் பட்டியல் அதிகமாக உள்ள வழித்தடங்களில் கூடுதல் ரெயில்களை இயக்குவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

dailythanthi