அமெரிக்கா, இங்கிலாந்தை தொடர்ந்து இந்திய குழந்தைகளை மிரட்டும் ‘மிஸ்-சி’

மதுரை: அமெரிக்கா, இங்கிலாந்தை தொடர்ந்து ‘மிஸ்-சி’ என்னும் புதிய நோய் இந்திய குழந்தைகளை மிரட்ட துவங்கியுள்ளது. இதுவரை சென்னையில் 55, மதுரையில் 12 பேரை இந்நோய் பாதித்தது தெரியவந்துள்ளது.

கொரோனா மக்களின் நிம்மதியை கெடுத்துவிட்டது. முதல் பாதிப்பு துவங்கி 10 மாதங்கள் முடிய இருக்கும் நிலையில், வைரஸின் வேட்டையை தடுக்கும் மருந்து கிடைக்கவில்லை. பொதுவாக புதிதாக வரும் நோய்கள் கொத்துக்கொத்தாய் குழந்தைகளை பலிகொள்ளும். கொரோனாவின் ஆட்டம் குழந்தைகளிடம் எடுபடவில்லை. ஆனால் கொரோனாவின் தொடர்ச்சியாக ‘மிஸ்-சி’ என்னும் புதிய பாதிப்பு குழந்தைகளை தாக்குவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏப்., மே மாதங்களில் சில நாடுகளில் இப்பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்பாக, அமெரிக்கா, இங்கிலாந்தில் அதிகளவில் தென்பட்டுள்ளது. இறுதியில் இந்திய குழந்தைகள் மீதும் ‘மிஸ்-சி’ தாக்குதல் தொடுக்க துவங்கியுள்ளது. இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாய் பாதிப்பு தென்படுகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரையில் ‘மிஸ்-சி’ தாக்கிய குழந்தைகளை டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இதுவரை 55 பேருக்கும், மதுரை அரசு மருத்துவமனையில் 12 பேருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. இந்நோய் பற்றி மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் நல இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் பாலசங்கர் கூறியதாவது:

‘மிஸ்-சி’ கைக்குழந்தை முதல் 14 வயது வரையிலான குழந்தைகளை குறி வைக்கிறது. கொரோனா பரவலுக்குப் பிறகு இப்பாதிப்பு தென்படுகிறது. இந்தியாவில் ஜூனில் தான் ‘மிஸ்-சி’ பற்றி கேள்விப்பட முடிந்தது. கொரோனா பாதித்த குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு இப்பாதிப்பு நேரலாம் என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் கொரோனாவை வீழ்த்தும் ஆன்டிபாடிகள் அவர்களது உடம்பில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வைரஸின் தொடர்ச்சியாக ‘மிஸ்-சி’ ஏற்படலாம் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் கொரோனா தாக்கிய அனைத்து குழந்தைகளுக்கும் இப்பாதிப்பு நேர்வதில்லை. அபூர்வமாக சிலரை பாதிக்கிறது.

அறிகுறிகள் என்னென்ன

24 மணி நேரத்திற்கும் மேலாக காய்ச்சல் நீடிக்கும். கண்கள், உள்ளங்கை, பாதம் சிவக்கும். நாக்கு, வாய் பகுதிகள் ஸ்ட்ராபெர்ரி பழங்களை போன்று சிவப்பாக மாறும். உதட்டில் வெடிப்பு ஏற்படும். தோல் பகுதிகளில் சிவப்பு நிறத்திலான திட்டுகள் தோன்றும். வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல் போன்ற அறிகுறிகள் இருக்கும். குறிப்பாக கொரோனா பாதித்த குடும்பத்தினரின் குழந்தைகளுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தவேக் கூடாது. கண்டுகொள்ளாமல் இருந்தால், கல்லீரல், சிறுநீரகம், மூளை என உடலின் பல உறுப்புகளை சேதப்படுத்தி மரணத்தை வரவழைக்கும்.

குறிப்பாக, இருதயத்தை பலவீனப்படுத்தும். அதில் உள்ள ரத்தக்குழாய்களில் அடைப்பை உண்டாக்கும். அல்லது, விரிசலை ஏற்படுத்தும். இருதய தசை நார்களையும் சேதப்படுத்தும். மதுரை, சென்னை உட்பட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இப்பாதிப்பை குணப்படுத்தும் விலை உயர்ந்த மருந்துகள் உள்ளன. இவற்றை இலவசமாகவே வழங்குகிறோம். மதுரையில் மட்டும் ‘மிஸ்-சி’ பாதித்த 12 குழந்தைகளை மீட்டுள்ளோம். ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை சிகிச்சை பெற வேண்டும் என்றார்.

பெயர் காரணம்

முதலில் இப்பாதிப்பை ‘பிம்ஸ்’ (PIMS: Pediatric Inflammatory Multisystem Syndrome) என்றழைத்தனர். பின்னர் ஒவ்வொரு நாடும் வெவ்வேறு பெயரில் அழைக்கத் துவங்கின. இறுதியாக அனைத்து நாடுகளும் ‘மிஸ்-சி’ (MIS-C: Multisystem Inflammatory Syndrome in Children) என்ற பெயரை பொதுவாக பயன்படுத்த துவங்கியுள்ளன. குழந்தைகளுக்கு மட்டுமே ஏற்படுவதாலும், அனைத்து உறுப்புகளையும் பாதிக்கக்கூடிய நோய் என்பதாலும் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஒரு டோஸ் ரூ.1லட்சம்

‘மிஸ்-சி’ பாதிப்பால் பல்வேறு நோய் அறிகுறிகள் தோன்றுகின்றன. இவற்றுக்கு தனித்தனியாக மருந்துகள் வழங்கப்படுகின்றன. தவிர நோயின் தீவிரத்தை தடுக்க ஸ்டீராய்டு, ஐ.வி.ஐ.ஜி., மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் ஐ.வி.ஐ.ஜி., மருந்து ஒரு டோஸின் விலை ரூ.1 லட்சம். பாதிப்பிற்குள்ளான குழந்தைக்கு ஒரு டோஸ் போதுமானது. இம்மருந்தை நரம்பு மூலம் செலுத்துகின்றனர். தொற்று இருந்தால் ஆன்டிபயாடிக் மருந்துகளையும் டாக்டர்கள் கொடுக்கின்றனர்.

எப்படி கண்டுபிடிக்கின்றனர்

நோயாளியின் ரத்த மாதிரியை சேகரித்து இ.எஸ்.ஆர்., சி.ஆர்.பி., என்னும் பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர். கிருமி உடலில் நுழைந்தால் ஏற்படும் மாற்றங்களை அளவிட இ.எஸ்.ஆர்., பரிசோதனை உதவுகிறது. அதே போல கிருமிகள் வந்தால் சி-ரியாக்டிவ் புரோட்டின் அளவு அதிகரிக்கும். இதை சி.ஆர்.பி., பரிசோதனை மூலம் உறுதி செய்கின்றனர். ‘மிஸ்-சி’க்கு இவ்விரு பரிசோதனைகள் தான் பிரதானம்.

dinamalar