புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு, விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக, கருத்துக் கணிப்பில் விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.
விவசாயிகள், தங்கள் உற்பத்தி பொருட்களை எங்கு வேண்டுமானாலும், விற்பனை செய்வது உள்ளிட்டவை தொடர்பாக, மூன்று வேளாண் மசோதாக்கள் சமீபத்தில் பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டு, சட்டமாகியுள்ளன.
இந்நிலையில், ‘கோவான் கனெக் ஷன்’ என்ற தனியார் அமைப்பு, விவசாயிகளிடம் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. நாடு முழுதும், 16 மாநிலங்களில், 53 மாவட்டங்களில், அக்., 3 – 9 வரை கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. அது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டு உள்ள செய்தியில் கூறிஉள்ளதாவது:
வேளாண் மசோதாக்களுக்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு தெரிவித்துள்ளவர்களில், பெரும்பாலானோருக்கு அந்த மசோதாவில் என்னென்னஉள்ளன என்பதே தெரியவில்லை. உதாரணத்துக்கு, இந்த மசோதாக்களுக்கு, 52 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதில், 36 சதவீதம் பேருக்கு, மசோதா குறித்து எதுவும் தெரியவில்லை. அதேபோல், ஆதரவு தெரிவித்துள்ள, 35 சதவீதம் பேரில், 18 சதவீதம் பேருக்கும், விபரம் தெரிய வில்லை.
கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில், 57 சதவீதம் பேர், குறைந்த விலையில் தங்கள் பொருட்களை விற்க நேரிடுமோ என்ற அச்சத்தை தெரியபடுத்தி உள்ளனர். அதேபோல், 33 சதவீதம் பேர், எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதார விலை நிறுத்தப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தை தெரிவித்து உள்ளனர்.’பிரதமர், நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு, விவசாயிகளுக்கு ஆதரவான அரசு’ என, 44 சதவீத விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 28 சதவீதம் பேர், அதற்கு எதிராக கருத்து தெரிவித்து உள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது
dinamalar