சட்டமன்ற தேர்தல் நடைபெறும் பீகாரில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

வாக்குச்சாவடி

பீகாரில் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில் அவுரங்காபாத் திப்ரா பகுதியில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அவுரங்காபாத்: கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு சூழலுக்கு மத்தியில் பீகார் சட்டசபை தேர்தல் இன்று தொடங்கியது. முதல்கட்டமாக 71 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் நடைபெறும் முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால், மத்திய சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலின்படி உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகள் அனைத்தும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு வழங்க ஏதுவாக சானிடைசர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. அதன்பின்னர் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெறுகிறது.

வாக்குப்பதிவை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளுக்காக மத்திய அரசு 30 ஆயிரம் மத்திய பாதுகாப்பு படை வீரர்களை குவித்து உள்ளது. மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகமுள்ள தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சந்தேகத்திற்குரிய நபர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில், அவுரங்காபாத்தின் திப்ரா பகுதியில் இன்று இரண்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த வெடி குண்டுகளை கைப்பற்றிய சிஆர்பிஎப் போலீசார், அவற்றை பாதுகாப்பாக செயலிழக்கச் செய்தனர். இதனால் அப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

malaimalar