காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம்: சட்ட திருத்தம் கொண்டு வந்தது மத்திய அரசு

கடந்த ஆண்டு சட்டப்பிரிவுகள் 370, 35-ஏ ஆகியவை ரத்து செய்யப்படுவதற்கு முன் ஜம்மூ காஷ்மீரில் அசையா சொத்துக்களை வெளி மாநில மக்கள் யாரும் வாங்க முடியாது.

ஸ்ரீநகர், ஜம்மூ காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு பிரித்தது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.  ஜம்மு காஷ்மீருக்கான உரிமைகளை மீண்டும் பெறும் வகையில் ”குப்கர் அறிக்கை” கூட்டமைப்பு ஒன்றையும் அங்குள்ள பிரதான கட்சிகள் துவங்கியுள்ளன.

இந்நிலையில், ஜம்மூ காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் என மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது.  இதற்காக ஜம்மு காஷ்மீருக்கான 26 மாநில சட்டங்களை ரத்து செய்தும், மாற்று சட்டத்தை அமல்படுத்தியும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து  இருக்கிறது. கடந்த ஆண்டு சட்டப்பிரிவுகள் 370, 35-ஏ ஆகியவை ரத்து செய்யப்படுவதற்கு முன் ஜம்மூ காஷ்மீரில் அசையா சொத்துக்களை வெளி மாநில மக்கள் யாரும் வாங்க முடியாது.

புதிய சட்டத்திருத்தங்கள் மூலம் காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்க மத்திய அரசு வழிவகை செய்துள்ளது. எனினும், விவசாய நிலங்களை விவசாயம் சாராதவர்களுக்கு விற்பனை செய்ய சட்டத்திருத்தங்கள் அனுமதியளிக்கவில்லை என துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

புதிய சட்டத்திருத்தங்கள் மூலம் வெளியாட்கள் ஜம்மூ காஷ்மீரில் நிலம் வாங்க சட்டரீதியாக எந்த தடையும் இல்லை. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஜம்மு காஷ்மீரில் உள்ள அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

dailythanthi