புத்தம் புது காலை

நடிகர்காளிதாஸ் ஜெயராம்
நடிகைகல்யாணி பிரியதர்ஷன்
இயக்குனர்சுதா கோங்கரா பிரசாத்
இசைஜிவி பிரகாஷ், கோவிந்த் வசந்தா, நிவாஸ் கே பிரசன்னா, சதீஷ் ரகுநாதன்
ஓளிப்பதிவுபி.சி.ஸ்ரீராம், நிகேத் பொம்மி, ராஜீவ் மேனன், செல்வகுமார், ஸ்ரேயாஸ் கிருஷ்ணா.

திரையுலகில் தற்போது ஆந்தாலஜி என்று அழைக்கப்படும் ஒரு சில குறும்படங்களின் குவியல் பிரபலமாகி வருகிறது. அந்தவகையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களாக வலம் வரும் கவுதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் உடன் சுஹாசினி மணிரத்னமும் இணைந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி திரைப்படம் ‘புத்தம் புது காலை’. கொரோனா ஊரடங்கின் போது நடைபெறும் உணர்ச்சி கதைகளாக இந்த குறும்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இளமை இதோ இதோ

முதுமையும் இளமையும் கலந்த காதல் கதை. சுதா கொங்கரா இயக்கி உள்ளார். மனைவியை இழந்த ஒரு ஆணுக்கும், கணவனை இழந்த பெண்ணுக்கும் இடையிலான காதலே இந்தப் படத்தின் கதை. ஜெயராம், ஊர்வசி இருவரும் அனுபவ நடிப்பும், காளிதாஸ் ஜெயராம், கல்யாணி பிரியதர்ஷன் இருவரும் துள்ளலான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். காளிதாஸ் ஜெயராமின் நடனமும், கல்யாணியின் கியுட் எக்ஸ் பிரசனும் ரசிக்க வைக்கிறது. காதலை மிகைப்படுத்தாமல் அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் சுதா கொங்கரா.

அவரும் நானும்/ அவளும் நானும்

தனது தாயை 30 வருடமாக சந்திக்காமல் இருக்கும் தாத்தா வீட்டிற்கு விருப்பம் இல்லாமல் செல்லும் பேத்தியின் கதை. கவுதம் மேனன் இயக்கத்தில் எம்.எஸ்.பாஸ்கர், ரீது வர்மா நடிப்பில் உருவாகி இருக்கிறது. தனக்கே உரிய பாணியில் படத்தை உருவாகி இருக்கிறார் கவுதம் மேனன். ஹீரோக்களை இங்கிலீஷ் பேச வைக்கும் கவுதம் இந்த படத்தில் தாத்தாவை இங்கிலீஷ் பேச வைத்திருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர் பேசும் ஸ்டைலும் அருமை. தாத்தா பேத்தி மற்றும் இல்லாமல் தந்தை மகள் பாசத்தையும் சொல்லியிருக்கிறார். ஆனால் கொஞ்சம் சுவாரஸ்யமாக தந்திருக்கலாம். எம்.எஸ்.பாஸ்கர், ரீ து வர்மா இருவரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். இறுதியாக வரும் பாடல் அருமை.

காஃபி எனி ஒன்

கோமாவில் இருக்கும் தாயை சந்திக்க வரும் மகள்கள், 75 வது பிறந்தநாளை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை கதையாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சுஹாசினி மணிரத்னம். மனைவியை ஐசியு-வில் வைத்து பார்க்க முடியாது. கடைசி காலத்தில் நான் பார்த்துக் கொள்வேன் என்று சொல்லும் கணவனின் அரவணைப்பு ரசிக்க வைக்கிறது. சிறிய நேரத்தில் கணவன் மனைவி பாசம், தாய் மகள் பாசத்தை கச்சிதமாக சொல்லி இருக்கிறார்கள். சுஹாசினி, அனுஹாசன், ஸ்ருதி ஹாசன் ஆகியோரின் நடிப்பு யதார்த்தம்.

ரீயூனியன்

பாரில் வேலை செய்யும் போதை பொருளுக்கு அடிமையான பெண், லாக்டவுனில் மருத்துவ நண்பர் வீட்டில் தங்கும் கதை. மாடர்ன் பெண் தோற்றத்திற்கு ஆண்ட்ரியா சிறப்பான தேர்வு. லீலா சாம்சன், குருச்சரண் ஆகியோர் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். இப்படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கிறார் ராஜீவ் மேனன். படம் ரசிக்கும் படி இருந்தாலும் காட்சிகள் யதார்த்த மீறல் போல் உள்ளது.

மிராக்கிள்

லாக்டவுன்ல் திருடி பிழைப்பு நடத்த நினைக்கும் இரண்டு திருடர்கள் கதை. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பாபி சிம்ஹா நடிப்பில் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. சிறப்பான கூட்டணியாக இருந்தாலும் இவர்கள் வைத்திருக்கும் டுவிஸ்ட் யூகிக்கும் படி அமைந்துள்ளது. சூது கவ்வும் பகலவனை பார்த்த அனுபவத்தை கொடுத்து இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். பாபிசிம்ஹாவின் உடல்மொழி ரசிக்கும்படி உள்ளது. இறுதியில் வரும் திருப்பம் சுவாரசியத்தை கொடுக்கிறது.

ஒளிப்பதிவும், பின்னணி இசையும் படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு படத்திற்கும் வெவ்வேறு ஒளிப்பதிவாளர்கள் எனினும் அனைவருமே அழகாக படமாக்கியிருக்கிறார்கள்.

மொத்தத்தில் ‘புத்தம் புது காலை’ புத்துணர்ச்சி.

malaimalar