நீர்வழிப்பாதையில் எழும்பும் புது கட்டடங்கள்; வேளச்சேரிக்கு ஆபத்து

வேளச்சேரி நீர்வழிப் பாதை, ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி, கட்டடம் கட்டும் பணி, இரவு, பகலாக நடக்கிறது.இதனால், கன மழையின்போது, வேளச்சேரி வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வேளச்சேரி மற்றும் பெருங்குடி ரயில் நிலையம் இடையே, தண்டவாளம் குறுக்கே, 80 அடி அகலத்தில் நீர்வழிப் பாதை உள்ளது. மழைக்காலங்களில், வேளச்சேரி, கல்லுக்குட்டை, பெருங்குடி, ஐ.ஐ.டி., உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் மழை நீர், நீர்வழிப் பாதை வழியாக, சதுப்பு நிலத்தை அடையும்.நீர்வழிப்பாதை அருகில் உள்ள, கால்வாய் மற்றும் அதை ஒட்டிய நீர்த்தேக்க பகுதியை, சிலர் ஆக்கிரமித்து கட்டடம் கட்டினர்.மொத்தம், 10 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பில் இருந்தது.இதனால், மழை நீர் செல்வது தடைபட்டு, சுற்றுவட்டார குடியிருப்புகளில் மழை நீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.இது குறித்து, 2018ல், நம் நாளிதழில், படத்துடன் செய்தி வெளியானது. இச்செய்தி அடிப்படையில், உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு எடுத்தது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்வழிப்பாதையை பாதுகாக்க வேண்டும் என, அரசுக்கு உத்தரவிடும் வகையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, ஆக்கிரமிப்பு இடங்கள் அளக்கப்பட்டன. பள்ளிக்கரணை கிராமம் சர்வே எண்: 658/1ஏ-ல், 210 ஏக்கர் இடம் உள்ளது. அதில், 98 ஏக்கர் இடம், வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு வழங்கப்பட்டது. மீதமுள்ள, 112 ஏக்கர் இடத்தில், 10 ஏக்கருக்கு மேல், ஆக்கிரமிப்பில் இருப்பது தெரிய வந்தது.மொத்த இடமும், சோழிங்கநல்லுார் தாலுகாவில் உள்ளது. 10 ஏக்கர் ஆக்கிரமிப்பு இடத்தில், சிலருக்கு, சென்னை மாவட்டம், வேளச்சேரி தாசில்தார் அலுவலகத்தில் இருந்து, பட்டா வழங்கியதும், அதன் அடிப்படையில், கட்டடம் கட்ட, மாநகராட்சி அனுமதி வழங்கியது தெரிய வந்தது.

நீதிமன்ற உத்தரவையடுத்து, 2018 செப்டம்பரில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு, ‘நோட்டீஸ்’ வழங்கப்பட்டது. அக்., 10ம் தேதி, வருவாய்த் துறை மற்றும் மாநகராட்சி இணைந்து, 1.50 ஏக்கர் இடத்தை மீட்டது. அதில் இருந்த, 24 கட்டடங்கள் இடிக்கப்பட்டன.மேலும், சில ஆக்கிரமிப்புகளுக்கு, ‘சீல்’ வைக்கப்பட்டது. முறைகேடாக பட்டா பெற்று, மேற்கொண்ட கட்டுமான பணியை நிறுத்த, மாநகராட்சி ‘நோட்டீஸ்’ வழங்கியது. மீட்கப்பட்ட இடம், 100 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும்.மீட்கப்பட்ட இடம் குறித்து, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த வருவாய் துறை, அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றியதாக கூறி உள்ளது. ஆனால், மீதமுள்ள இடத்தை மீட்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், மீட்கப்பட்ட இடம் மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. வருவாய்த் துறை வைத்த, ‘சீல்’ உடைக்கப்பட்டு உள்ளது. மேலும், மாநகராட்சி வழங்கிய நோட்டீசை கிழித்து எறிந்து, மீண்டும், ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டுமான பணி தொடர்கிறது.இந்நிலையில், அரசு இடம் என தெரிந்தும், 10 நாட்களுக்குமுன், அதே இடத்தில், மற்றொரு கட்டடம் கட்டும் பணி துவங்கியது. மாநகராட்சி நோட்டீஸ் கொடுத்தும், இரவு, பகலாக பணி நடக்கிறது.இதனால், நீர்வழிப்பாதை அடைபட்டு, கன மழையின்போது, வேளச்சேரி பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்புள்ளது.

ஜோராக நடக்கும் பணிகள்!

ஆக்கிரமிப்பாளர் ஒருவர், வருவாய்த் துறையை ஏமாற்றி பட்டா பெற்று, அதை வைத்து, மாநகராட்சியில் வரைப்படம் வாங்கி கட்டடம் கட்டுகிறார். அதிகாரிகளும், இடத்தை ஆய்வு செய்யாமல் பட்டா வழங்கி உள்ளனர். மற்றொருவர், பட்டா, வரைப்படம் அனுமதி இல்லாமல், கட்டடம் கட்டுகிறார். மாநகராட்சி, ‘நோட்டீஸ்’ வழங்குவதோடு, தங்கள் கடமையை முடித்து கொள்கிறது. போலீசை வைத்து, பணியை நிறுத்தவில்லை. வேறு ஒருவர், 70 சென்ட் இடத்தை ஆக்கிரமித்து, சுற்றிச் சுவர் எழுப்பி, விளையாட்டு பயிற்சி மையம் அமைத்துள்ளார். கடந்த, 2018ல், இடத்தை மீட்ட வருவாய்த்துறை, ‘சீல்’ வைத்து, எச்சரிக்கை வாசகம் எழுதியது. மீண்டும், வாசகத்தை அளித்து, சீலை உடைத்து, ஆக்கிரமிப்பாளர் இடத்தை தன்வசப்படுத்தி கொண்டுள்ளார்

தடுப்பு வேலி தான் தீர்வு!

வருவாய் துறை, ரயில்வே நிர்வாகத்திற்கு, அரசாணை வழியாக இடத்தை ஒதுக்கியது. ஆனால், எல்லை நிர்ணயம் செய்து, இடத்தை முறையாக ஒப்படைக்கவில்லை. இதனால், எல்லை தெரியாமல், வேலி அமைத்து இடத்தை பாதுகாக்க முடியாமல், ரயில்வே நிர்வாகம் திணறுகிறது. இதுபோன்ற குளறுபடிகள், ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகின்றன.

ஆக்கிரமிப்பை மீட்டதால், நீர்வழிப் பாதைகள் முறையாக சீரமைக்கப்படும் என நம்பினோம். வருவாய் துறை, நீதிமன்றத்தையும் ஏமாற்றி உள்ளது. சில அதிகாரிகள், மறைமுக ஆதரவு அளிப்பதால், அரசு இடம் என தெரிந்தும், ஆக்கிரமிப்பாளர்கள் தைரியமாக கட்டடம் கட்டுகின்றனர். உயர் அதிகாரிகள், எம்.பி., – எம்.எல்.ஏ.,விடம் பல முறை புகார் அளித்தும், எந்த பயனும் இல்லை. இப்படியே விட்டால், வேளச்சேரி வெள்ளக்காடாக மாறிவிடும்.
வேளச்சேரி பகுதி நலச்சங்க நிர்வாகிகள்

பட்டா ரத்து செய்ய வேண்டிய கோப்புகள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ளன. ‘சீல்’ உடைத்து, எச்சரிக்கை வாசகத்தை அளித்தவர் மீது, போலீசை வைத்து நடவடிக்கை எடுக்கப்படும். பட்டா, வரைபடம் இல்லாமல் கட்டடம் கட்டுவது தொடர்பாக, எங்கள் கவனத்திற்கு வரவில்லை. கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கிறோம்.
வருவாய்த்துறை அதிகாரிகள்

நீதிமன்றம் உத்தரவிட்டு, இரண்டு ஆண்டுகளாகியும், வருவாய்த்துறை பட்டாவை ரத்து செய்யவில்லை. இதனால், ஆக்கிரமிப்பாளரிடம் இருக்கும், வரைபடம் அனுமதியை எங்களால் ரத்து செய்ய முடியவில்லை. நாங்கள் கட்டுமான பணியை நிறுத்த செல்லும்போது, பட்டாவை காட்டி, கட்டுமான பணியை தொடர்கிறார். பட்டா, வரைபடம் இல்லாமல் வீடு கட்டும் நபருக்கு, நோட்டீஸ் வழங்கி உள்ளோம். இருந்தும், வருவாய்த் துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநகராட்சி அதிகாரிகள்

dinamalar