இந்திய தடுப்பூசி பிப்ரவரியில் கிடைக்கும்: ஐ.சி.எம்.ஆர்., விஞ்ஞானி தகவல்

புது டில்லி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.,) மற்றும் ஐதராபாத்தில் உள்ள பாரத் பையோடெக் இணைந்து உருவாக்கியுள்ள ‘கோவேக்சின்’ அடுத்த ஆண்டு பிப்ரவரியில் கிடைக்கும் என மூத்த விஞ்ஞானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 55 ஆயிரம் பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். புதிதாக 50,210 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 704 பேர் உயிரிழந்துள்ளனர். இது புதனன்று ஏற்பட்ட தொற்றை காட்டிலும் 8.5% அதிகம் ஆகும். தொற்று நோய்க்கு எதிராக தடுப்பூசி கிடைக்கும் போது தான் பாதுகாப்பான சூழல் உருவாகும் நிலை உள்ளது. உலகளவில் பல தடுப்பூசிகள் பரிசோதனையில் உள்ளன. இந்தியாவில் மத்திய அரசுடன் இணைந்து பாரத் பையோடெக் உருவாக்கியுள்ள தடுப்பூசி 2021-ல் இரண்டாம் காலாண்டில் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஐ.சி.எம்.ஆர்., மூத்த விஞ்ஞானி செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், அடுத்த ஆண்டு, பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தடுப்பூசி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். “இரண்டு கட்ட பரிசோதனைகளிலும் தடுப்பூசி நல்ல செயல்திறனை காட்டியுள்ளது. மூன்றாம் கட்ட சோதனைகள் முடிவதற்கு முன்பே மக்களுக்கு கோவேக்சின் தடுப்பூசியை வழங்கலாமா என்பதை மத்திய சுகாதார அமைச்சகம் தான் முடிவு செய்ய வேண்டும். அதில் கொஞ்சம் ஆபத்து இருக்கலாம். ரிஸ்க் எடுக்கத் தயாராக இருந்தால், தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம்.” என தெரிவித்தார்.

முதியவர்கள் மற்றும் தொற்று ஏற்பட அதிக ஆபத்துள்ளவர்களுக்கு அவசரகால ஒப்புதல் வழங்க பரிசீலித்து வருவதாக ஏற்கனவே சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியிருந்தார். இறுதி கட்ட பரிசோதனைகள் நடைபெற தொடங்கியதும் இது பற்றி முடிவெடிப்பார்கள் என சுகாதார அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன. உலகளவில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி மற்றும் சீனாவின் சினோபார்ம் நிறுவன தடுப்பூசிகள் அவசர சூழலில் மக்களுக்கு செலுத்தப்படுகின்றன. இதனை பொது மக்கள் பலரும் சொந்த ரிஸ்கில் செலுத்திக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

dinamalar