பிஸ்கோத்

சிறிய அளவில் பிஸ்கட் கம்பெனி நடத்தி வருகிறார் ஆடுகளம் நரேன். சிறுவயதிலேயே புத்திசாலித்தனமாக இருக்கும் இவரது மகன் சந்தானத்தை, பெரிய பிஸ்கட் கம்பெனி உருவாக்கி அதில் அவரை நிர்வாக தலைவராக அமைக்க வேண்டும் என்று ஆடுகளம் நரேன் ஆசைப்படுகிறார்.

இந்நிலையில் திடீரென்று ஆடுகளம் நரேன் இறந்து போகிறார். இவரது பிஸ்கட் கம்பெனியை ஆடுகளம் நரேன் நண்பரான ஆனந்தராஜ் எடுத்து நடத்துகிறார். இதில் வேலையாளாக இருக்கிறார் சந்தானம்.

பிஸ்கட் கம்பெனியில் வரும் வருமானத்தை வைத்து ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்து வருகிறார் சந்தானம். முதியோர் இல்லத்திற்கு புதியதாக வரும் சௌகார் ஜானகி சந்தானத்திற்கு ஒரு கதை சொல்கிறார்.

அந்த கதை சந்தானத்தின் வாழ்க்கையில் நிஜமாகிறது. மேலும் சௌகார் ஜானகி சொல்லும் அடுத்தடுத்த கதைகள் சந்தானத்தின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுகிறது. இறுதியில் சந்தானத்திற்கு ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? தந்தையின் ஆசை போல் பிஸ்கட் கம்பெனியின் நிறுவன தலைவராக சந்தானம் மாறினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

இப்படத்தின் நாயகனாக நடித்திருக்கும் சந்தானம், தன்னுடைய வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். புதிய கெட்டப் அதற்கேற்ற உடல் மொழி, டைமிங் காமெடி என அனைத்திலும் ஸ்கோர் செய்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இவரது நடிப்புக்கும் திரைக்கதை ஓட்டத்திற்கும் பெரிய பலமாக மொட்டை ராஜேந்திரனும் லொள்ளு சபா மனோகரனும் அமைந்திருக்கிறார்கள். இவர்களின் கெட்டப்பும் பேசும் வசனமும் சிறப்பு.

ஸ்வாதி முப்பாலா ஆகிய இருவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு சௌகார் ஜானகியை திரைப்படத்தில் பார்ப்பது மகிழ்ச்சி. தன்னுடைய அனுபவ நடிப்பால் கதைசொல்லி ரசிக்க வைத்திருக்கிறார்.

பல படங்களின் சாயல்களை வைத்து காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கி இருக்கிறார் கண்ணன். படம் முழுக்க சந்தானம் மட்டுமே அதிக காட்சிகளில் வருகிறார். மற்ற கதாபாத்திரங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.

சண்முகசுந்தரத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். பல்வேறு கட்டங்களில் அதற்கேற்றாற்போல் காட்சிகளை அழகாக படம் பிடித்திருக்கிறார். ரதன் இசையில் பாடல்களை ஒருமுறை கேட்கலாம்.

மொத்தத்தில் ‘பிஸ்கோத்’ நல்ல சுவை.

malaimalar