நாகர்கோவிலில் உள்ளூர் தொலைக்காட்சி நிருபராக இருக்கும் ஆர்.ஜே.பாலாஜி, தாத்தா, அம்மா, 3 தங்கைகளுடன் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார். இதே சமயம் 11 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிக்கும் செய்தியை சேகரித்து வருகிறார்.
ஆர்.ஜே.பாலாஜியின் அம்மா ஊர்வசி திருப்பதி கோவிலுக்கு செல்ல பல ஆண்டுகளாக முயற்சி செய்கிறார். ஆனால் போக முடியவில்லை. இதனால் குல தெய்வம் மூக்குத்தி அம்மன் கோவிலுக்கு சென்றால் கஷ்டங்கள் போகும் என்று ஒருவர் சொல்ல அங்கு குடும்பத்துடன் தங்குகிறார் ஆர்.ஜே.பாலாஜி.
அங்கு தனது கஷ்டத்தைச் சொல்லிவிட்டு ஆர்.ஜே.பாலாஜி தூங்கும் போது இரவில் மூக்குத்தி அம்மனாக தோன்றுகிறார் நயன்தாரா. அதன்பின் ஆர்.ஜே. பாலாஜியுடன் பயணிக்கும் நயன்தாரா, அவரின் கஷ்டங்களை போக்கினாரா? 11 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிக்கும் செய்தி என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் அம்மனாக வரும் நயன்தாரா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி அழகு சேர்த்திருக்கிறார். பல விஷயங்களை சாதாரணமாக வசனம் மூலம் சொல்லிவிட்டு செல்கிறார். காமெடி காட்சிகளிலும் கலக்கி இருக்கிறார்.
நாயகனாக நடித்திருக்கும் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் கைத்தட்டல் பெறுகிறார். அம்மனை பார்த்தவுடன் நம்பாமல் சோதிப்பது, பணம் கிடைத்தவுடன் சந்தோஷப்படுவது என பல காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.
அம்மாவாக வரும் ஊர்வசியின் நடிப்பு அற்புதம். பொய் சொல்வது, சமாளிப்பது, கணவருக்காக எங்குவது என நடிப்பில் பளிச்சிடுகிறார். தாத்தா மௌலி, தங்கை ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள். போலிச் சாமியாராக வரும் அஜய் கோஷ் சிறந்த தேர்வு. ஆனால் பல இடங்களில் இவரது நடிப்பு செயற்கை தனமாக அமைந்துள்ளது.
கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி இருக்கிறார். முதல்பாதி கலகலப்பாகவும், இரண்டாம் பாதி சுவாரஸ்யமாகவும் கொடுத்திருக்கிறார்கள். படத்திற்கு பெரிய பலம் வசனங்கள். அதுபோல் கதாபாத்திரங்களிடம் அருமையாக வேலை வாங்கியிருக்கிறார்கள்.
தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு நாகர்கோவிலின் அழகை அப்படியே கடத்தியுள்ளது. நிறைய காட்சிகள் குளிர்ச்சியாக உள்ளது. கிரிஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் படத்திற்கு தடையாக இருக்கிறது.
மொத்தத்தில் ‘மூக்குத்தி அம்மன்’ கலகலப்பான தரிசனம்.
malaimalar
மூக்குத்தி அம்மன் விமர்சனம் படு மோசம். கதையின் கருவுக்கு போகாமல் வெறும் நடிகர் புகழ்ச்சியெல்லாம் ஒரு விமர்சனமா?
இந்து ஆன்மிக வாதிகள் மதத்தை வைத்து சமுதாய பாமர மக்களை ஏய்ப்பது, அரசியல் ஆட்டம் போடுவது மதம் பிடித்து ஆடுவதெல்லாம் விமர்சகருக்கு விளங்கவில்லையா அல்லது சமயம் பற்றிய அறிவு போதலையா?
தமிழ்ப்படம் இந்துதுவத்திற்கு முன் தமிழர் சமய காலங்களில் சித்தர்கள் ஆசிவகம், சைவ சித்தாந்த நெறிகளை பணமின்றி அன்பு பண்பு பாராட்டி வாழ்ந்த காலங்களை இயக்குநர் ஒப்பீடு காட்டி தமிழர்களின் ஆன்மிக அறிவை மேம்படுத்தி இருக்கலாம்.
இனியாவது மகா ஆன்மிகவாதிகள் பணமே பிரதானம் என்று ஏமாற்றாமல் பிரமச்சாரி என்றால் பெண்களோடு ஆட்டம் போடாமல் கல்யாணம் குடும்பம் என்று காதல் வாழ்வுக்கு வரணும்.
ஆன்மிகம் காட்டி காமத்தன ஆண்மீகம் நிறுத்தப்பட வேண்டும் .நன்றி .
பொன்ரங்கன்.
மலேசிய தமிழ்ச்சமய பேரவை செயலாளர்.