டிசம்பர்-ஜனவரி மாதங்கள் வைரஸ் பரவலுக்கு உகந்த சூழ்நிலை

கொரோனா பரிசோதனை

டிசம்பர்-ஜனவரி மாதங்களில் வைரஸ் பரவலுக்கு உகந்த சூழ்நிலை இருப்பதாக கொரோனா தொழில்நுட்ப குழு பரிந்துரை செய்துள்ளது.

பெங்களூரு, கர்நாடக கொரோனா தொழில்நுட்ப குழுவின் 52-வது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. குழுவின் தலைவர் டாக்டர் சுதர்சன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அதன் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த விவரங்கள் வருமாறு:-

கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பள்ளிகளை திறக்க அரசுக்கு ஆலோசனை வழங்குவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில் வருகிற டிசம்பர் மாதம் வரை பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று அரசுக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு பள்ளிகளை திறப்பது குறித்து டிசம்பர் கடைசி வாரத்தில் மீண்டும் கூடி ஆலோசிக்கப்படும். கர்நாடகத்தின் நலன் கருதி இந்த பரிந்துரையை அரசுக்கு நாங்கள் செய்கிறோம்.

தேசிய அளவில் கொரோனா குறைந்த நிலையில் டெல்லி, அரியானா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வைரஸ் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. மேலும் டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மாதங்களில் கடும் குளிர் இருக்கும். இது வைரஸ் பரவலுக்கு உகந்த சூழ்நிலையாக இருக்கிறது. மேலும் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் 2-வது அலை அதிகமாக இருக்கும் என்று தொற்றுநோய் பரவல் குறித்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இது கருத்தில் கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் முடிவு எடுக்கப்பட்டது.

இதற்கிடையே முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று பள்ளிகளை திறப்பது குறித்து நடத்திய கூட்டத்திற்கு முன்பு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், “கூட்டத்தில் கலந்து கொள்கிறவர்களின் ஆலோசனை கேட்டு, பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுப்போம். கொரோனா தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் பரிந்துரையையும் கவனத்தில் கொள்வோம்“ என்றார்.

பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் கூறுகையில், “பள்ளிகள் கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டிருக்க வேண்டும். 6 மாதங்கள் ஆகிவிட்டது. பள்ளிகளை திறக்கக்கூடாது என்றும், சில வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று பலதரப்பட்ட கருத்துகள் பெற்றோரிடம் இருந்து வருகின்றன. ஆன்லைன் வகுப்புகளின் பயன் கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. குழந்தை தொழிலாளர், குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு போன்ற சமூக பிரச்சினைகளும் எழுந்துள்ளன. இதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்” என்றார்

malaimalar