‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ – இந்தியாவின் தேவை: பிரதமர் மோடி

புதுடில்லி: ஒரு நாடு, ஒரு தேர்தல் என்பது இந்தியாவின் தேவை என கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ஒவ்வொரு சில மாதங்களுக்கு இடையிலும் வெவ்வேறு இடங்களில் தேர்தல்கள் நடத்தப்படுவதால் வளர்ச்சிப் பணிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

80வது அகில இந்திய தலைமை அலுவலர்கள் மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது: 2008ம் ஆண்டு இதே நாளில், பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் மும்பையைத் தாக்கினர். வெளிநாட்டினர், போலீசார் உட்பட பலர் இறந்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அந்த காயங்களை இந்தியா மறக்காது. இன்று இந்தியா புதிய கொள்கைகளுடன் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுகிறது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் எங்கள் பாதுகாப்பு வீரர்களுக்கும் நான் தலைவணங்குகிறேன்.

எங்கள் அரசியலமைப்பில் பல அம்சங்கள் இருந்தாலும், கடமைகளுக்கு முக்கியத்துவம் என்னும் சிறப்பு அம்சமும் உள்ளது. காந்தி அதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். உரிமைகள் மற்றும் கடமைகளில் அவர் மிகுந்த நெருக்கத்துடன் இருந்தார். நாம் நமது கடமைகளை செய்தால், உரிமைகள் தானாகவே பாதுகாக்கப்படும் என்பதை உணர்ந்தார்.

ஒரு நாடு, ஒரு தேர்தல் என்பது விவாதத்திற்குரிய விஷயம் மட்டுமல்ல, இது இந்தியாவின் தேவையும் கூட. ஒவ்வொரு சில மாதங்களுக்கு இடையிலும் வெவ்வேறு இடங்களில் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இது வளர்ச்சிப் பணிகளுக்கு இடையூறாக இருக்கிறது என்பதை அனைவரும் அறிவீர்கள். இதற்காக நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டும். இதற்கான வழியை நாம் ஏற்படுத்த வேண்டும். நாடு முழுவதும் பாராளுமன்ற, சட்டசபை தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்

dinamalar